அக்டோபர் 19 – முதலாவது நீதி!
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).
முதலாவது, கர்த்தரை முன்வையுங்கள். அவருடைய நீதியைத் தேடி அதற்கே முக்கியத்துவம் கொடுத்து, மேன்மைப்படுத்துங்கள். நீங்கள் தேவ நீதியை தேடும்போது உங்களுக்கு சுகம், பெலன், ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவை கூடக்கொடுக்கப்படும்.
ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழும்பும்போது சிரித்த முகத்தோடு, “நீதியின் கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லி அவருடைய முகத்தைத் தேடுங்கள். பத்திரிக்கை மற்றும் காஃபி ஆகியவற்றைத் தேடாமல் தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட உங்களை ஒப்புக்கொடுங்கள்.
இங்கே கர்த்தர் முதலாவது நீதியையும், பின்பு சமாதானத்தையும், அதைத் தொடர்ந்து, பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தையும் சொல்லுகிறார். ஆம், நீதியும், சமாதானமும், சந்தோஷமும் ஒன்றொடொன்று இணைந்தவை.
நீங்களும், நானும் சென்று சேரக்கூடிய பரலோக இராஜ்யத்தை நோக்கிப்பாருங்கள். அந்த இராஜ்யம் நீதியால் நிரம்பியிருக்கும். அநியாயம் செய்பவர்களோ, நியாயத்தைப் புரட்டுபவர்களோ ஒருவரும் அங்கே காணப்படப்போவது இல்லை. அப்.பேதுரு கடைசி காலங்களைப்பற்றி எழுதிவிட்டு முடிவாக, “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” (2 பேது. 3:13) என்று எழுதுகிறார்.
நித்திய இராஜ்யத்திலே இருக்கும் புதிய வானமானாலும், புதிய பூமியானாலும், கண்ணாடிக் கடலானாலும், புதிய எருசலேமானாலும், சீயோன் பர்வதமானாலும், அவற்றில் தேவனுடைய நீதி வாசமாயிருக்கும். பாவமோ, அருவருப்போ, அங்கே காணப்படுவதில்லை. நீதியின் தேவனாகிய கர்த்தர்தாமே அங்கே ஆளுகை செய்வார்.
அப். யோவான் தரிசனத்திலே நித்தியத்தைப் பார்த்து எழுதுகிறார். “பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” (வெளி. 19:11). உங்களுடைய கண்கள் அந்த நீதியின் தேவனையே நோக்கிக்கொண்டிருக்கட்டும்.
ஏசாயா சொல்லுகிறார், “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன், என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).
தேவபிள்ளைகளே, நீங்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய நீதிக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நீதியின் வஸ்திரங்களை உங்களுக்கு உடுத்தி நீதியின் சால்வையைத் தரிப்பிக்கிறார். பரலோகத்தில் பரிசுத்தவான்களுடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்து, கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள்.
நினைவிற்கு:- “சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” (வெளி. 19:8).