அக்டோபர் 17 – நீதியினிமித்தம்!
“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:10).
நீங்கள் கர்த்தருக்குப் பயந்து அவருடைய நீதியைச் சுதந்தரித்துக்கொள்ளும்போது, சாத்தானுடைய கொடூரமான எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். தேவனுக்குப் பரமவிரோதியாய் இருக்கிற அவன், யார் யார் நீதி செய்யவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பரமஎதிரியாக மாறுகிறான். சோதனைகளைக் கொண்டுவருகிறான். போராட்டங்களைக் கொண்டுவருகிறான். தேவபிள்ளைகள் மனமுடைந்துபோவதற்கான எல்லா சூழ்நிலைகளையும் உருவாக்குகிறான்.
என்னுடைய தகப்பனார் அரசாங்கத்திலே ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் பணியாற்றினார். லஞ்சம் வாங்காமல், செல்வந்தர்கள் பின்னால் ஓடித்திரியாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்ததினிமித்தம் அதிகமாக ஏளனம் செய்யப்பட்டார். அங்குள்ள தொழிற்சங்கத்தில் சேராததினால் அவரைத் தனியாகப் பிரித்து கடுமையாய் நடத்தினார்கள். ஆயுத பூஜை போன்ற பல பூஜைகளில் பங்கேற்க மறுத்ததினால், பல அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளானார்.
ஆனால் கர்த்தரோ, அவரை அரவணைத்து தேற்றினார். “நீ பாக்கியவான் மகனே, என் நாமத்தினிமித்தமும், நீதியினிமித்தமும் துன்பப்பட்டபடியால் பாக்கியவானாய் இருப்பாய்” என்றார். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு பரலோக ராஜ்யத்தைக் கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.
ஒருவேளை நீங்கள் கர்த்தர்மேல் வைத்த அன்பினிமித்தமாகவும், நீதி நியாயங்களினிமித்தமாகவும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். சில கிராமங்களில் ஊர் கட்டுப்பாடு என்று வைத்து கிறிஸ்தவர்களை ஒடுக்குகிறார்கள். அநேக சகோதரிகள் புறஜாதி மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியினாலே, கணவனால் புறக்கணிக்கப்பட்டு, குடும்பத்தாரால் ஒடுக்கப்பட்டு, தத்தளித்துக்கொண்டு இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ நீதிக்காக நின்றார்கள். கர்த்தரைத் தவிர வேறு எந்த விக்கிரகங்களுக்கு முன்பாகவும், எங்களுடைய கைகளை எடுப்பதில்லை என்று பக்திவைராக்கியமாய் முழங்கினார்கள். அவர்களுக்காக அக்கினிச் சூளை ஏழுமடங்கு சூடாக்கப்பட்டது. அதைப் பார்த்த தேவகுமாரன் அந்த சூளையிலே இறங்கி அவர்களோடு உலாவினார். அக்கினி அவர்களை சேதப்படுத்தாதபடி பாதுகாத்துக்கொண்டார். இன்றைக்கும் அவர்களுடைய பெயர்கள் பாக்கியவான்களின் பட்டியலில் இடம்பெறுகிறது.
நீங்கள் கர்த்தருக்காக வைராக்கியமாய் நிற்பீர்களென்றால், கர்த்தர் உங்களுக்காக அதிக வைராக்கியமுள்ளவராய் இருப்பார். விசுவாச வீரர்களின் பட்டியலில் இருந்த அப். பவுல் நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களை, குறிப்பிடத் தயங்கவில்லை. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாய் இருக்கவில்லை. ஆம், அவர்கள் நீதிக்காக உறுதியாய் நின்றார்கள். வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து விடுவதில்லை. அடுத்து பரலோக இராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுவோம் என்னும் பெரிய விசுவாசம் அவர்களுக்கு இருந்தது.
தேவபிள்ளைகளே, கர்த்தருக்காக நில்லுங்கள். நீதிக்காக வைராக்கியம் கொள்ளுங்கள். நீங்கள் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்.
நினைவிற்கு:- “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோ. 2:12).