செப்டம்பர் 29 – கபடமில்லாத வாழ்க்கை!
“இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்” (யோவா. 1:47).
நாத்தான்வேல் இயேசுவின் ஆரம்ப சீஷர்களில் ஒருவன். யோவான் எழுதின சுவிசேஷத்தில் இவருடைய பெயர் நாத்தான்வேல் என்றும் மற்ற சுவிசேஷங்களில் பர்த்தொலொமேயு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது (மத். 10:3; மாற். 3:18). முதல்முதலில் நாத்தான்வேலை கிறிஸ்துவண்டை அழைத்துவந்தது பிலிப்பு என்பவராகும் (யோவா. 1:45).
இயேசுகிறிஸ்து, நாத்தான்வேலைக்குறித்து எவ்வளவு அருமையான சாட்சி கொடுத்தார்! கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்பதே அவரது சாட்சி. “கறைதிரை, மாசற்ற உத்தம தேவனுடைய பிள்ளை. உள்ளத்தில் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாத பக்தியுள்ள இஸ்ரவேலன்” என்று அவர் சொன்னார். கர்த்தரிடத்தில் இப்படிப்பட்ட சாட்சி பெறுவது எத்தனை பாக்கியமானது! “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமு. 16:7). அவர் உள்ளந்திரியங்களை ஊடுருவிப் பார்க்கிறவர்.
அநேகர் கபடற்ற உத்தம வாழ்க்கை வாழ்வதில்லை. வேஷமாகவே வாழ்ந்துகொண்டு மாய்மாலமாகத் திரிகிறார்கள். வஞ்சகமாகப் பேசுகிறார்கள். யூதாஸ்காரியோத்து மூன்று ஆண்டுகளுக்குமேலாக கிறிஸ்துவைப் பின்பற்றிவந்தபோதிலும், அவனுடைய உள்ளத்தில் கபடமும், வஞ்சகமுமே நிறைந்திருந்தது.
இயேசுவுக்கு முத்தம் கொடுத்தாலும், அது அவரைக் காட்டிக்கொடுக்கும் அடையாளமாகவே இருந்தது. அதைத்தான் கபடு என்று நாம் சொல்லுகிறோம். உள்ளத்திலே வஞ்சனையை வைத்துக்கொண்டு யூதாஸ் நல்லவனைப்போலவும், பாசமிக்கவன்போலவும் நடப்புள்ள வாழ்க்கை வாழ்ந்தான். அந்தோ! யூதாசினுடைய முடிவு பரிதாபமானதாக அமைந்தது.
“பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு” (நீதி. 26:24,25). இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திலே மதத்தலைவர்களாக பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் ஆகியோர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் ஆவிக்குரியவர்களாயிருக்கவில்லை. கபடற்ற உத்தம இஸ்ரவேலராய் இருக்கவில்லை. சடங்காச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் கடைப்பிடித்தார்கள். அவர்களுடைய இருதயமோ கர்த்தருக்குத் தூரமாய் இருந்தது.
கர்த்தர் அவர்களை “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மாய்மாலக்காரர்களே,” என்று அழைத்தார். “நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமங்களினாலும் நிறைந்திருக்கிறீர்கள்” (மத். 23:28) என்று இடித்துரைத்தார்.
வேதத்தில் மொத்தம் ஏழு இடங்களில், “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ!” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். கபடுள்ள வாழ்க்கையை கர்த்தர் வெறுக்கிறார். போலியான வாழ்க்கையைக் கர்த்தர் விரும்புவதில்லை. தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையை கபடற்ற வாழ்க்கையாகக் கட்டி எழுப்புங்கள். சத்தியத்தை சத்தியமாகப் பேசுங்கள். உங்களுடைய உதடுகள் பேசுகிறதை, உங்கள் உள்ளம் ஆமோதிக்கட்டும். அப்பொழுது கர்த்தருடைய பார்வையில் தெளிவைப் பெறுவீர்கள்.
நினைவிற்கு:- “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்” (சங். 32:2).