நவம்பர் 25 – யேகோவாயீரே!
“ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது” (ஆதி. 22:14).
கர்த்தர் யேகோவாயீரே என்ற நாமத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார். யேகோவாயீரே என்பதற்கு, கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்பது அர்த்தமாகும். கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் யேகோவாயீரேவாக, நம்முடைய தேவைகளை சந்திக்கிறவராக இருக்கிறார்.
கர்த்தர் ஒருமுறை ஆபிரகாமைப் பார்த்து, “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப்போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாக பலியிடு என்றார்” (ஆதி. 22:2).
இதைக்கேட்டபோது ஆபிரகாமுடைய இருதயம் உடைந்துபோயிருக்கவேண்டும். இருப்பினும் அவர், கர்த்தர் தன்னுடைய கீழ்ப்படிதலை சோதித்து அறியவேண்டுமென்று விரும்புகிறார் என்பதை அறிந்து, முறுமுறுக்காமல் தன் ஒரே மகனாகிய ஈசாக்கை மோரியா மலைஉச்சிக்கு அழைத்துச் சென்றார்.
போகிற வழியிலே ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமிடம் நெருப்பும் கட்டையும் தகனபலிக்கு இருக்கும்போது ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், தேவன் தமது தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைத் தானே பார்த்துக்கொள்வார் என்றார்.
அந்த இடம் வந்தபோது, பலிபீடத்தை ஆயத்தப்படுத்தி, ஈசாக்கை பலிபீடத்திலே கிடத்தி, கத்தியை ஓங்கி வெட்டப்போகும் நேரத்தில், வானத்திலிருந்து கர்த்தருடைய தூதனானவர், ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார். அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்” (ஆதி. 22:12).
மாத்திரமல்ல, “ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது” (ஆதி. 22:13,14).
இதிலிருந்து ஒன்றை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். கர்த்தர் நம்முடைய தேவையை அறிந்தவராயிருக்கிறார். அதை நமக்கு ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். நாம் அவரை நோக்கிப்பார்க்கிறோமா என்று சில நேரங்களில் நம்மைச் சோதிக்கிறார். அப்படிப்பட்ட நேரங்களில் முறுமுறுக்காமல், கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு யேகோவாயீரே என்று அழைப்போமானால், கர்த்தர் நம்மில் வெளிப்படுவார். அற்புதங்களைச் செய்வார். ஆச்சரியமாய் நடத்துவார். தேவபிள்ளைகளே, எப்படிப்பட்ட தேவையாயிருந்தாலும், கர்த்தர் அதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).