செப்டம்பர் 19 – வானத்து அடையாளம்!
“வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்” (மத்.16:1).
யூதர்கள் எப்போதும் அடையாளத்தைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்பவில்லை (மத். 12:38). அவரைச் சோதிக்கும்படியாக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள்.
இன்றைக்கும் ஜனங்கள் வானத்திலிருந்து அடையாளங்களை எதிர்பார்த்து நாள், நட்சத்திரம் பார்க்கிறார்கள். ராசிபலன்களைப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் வானத்தை அண்ணாந்து பார்த்து வான சேனைகளைப் பணிந்துகொள்ளுகிறார்கள். சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். முடிவிலே வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளுடைய சேனைகளின் கையிலே சிக்கிக்கொள்ளுகிறார்கள்.
ஆனால் இயேசுகிறிஸ்து வானத்தை அண்ணாந்து பார்த்த மூன்று முக்கியமான சந்தர்ப்பங்கள் உண்டு. பசியோடு இருந்த மக்களுக்கு போஜனம் கொடுக்கும் முன்பாக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்தார் (மத். 14:19). அந்த அப்பங்களைப் பிட்டு சீஷர்களிடத்தில் கொடுத்தபோது, அப்பங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. ஐந்தாயிரம் பேருக்கு மேலானவர்கள் திருப்தியாய் சாப்பிட்டார்கள்.
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்த இரண்டாவது சந்தர்ப்பத்தை மாற். 7:34ல் வாசிக்கிறோம். கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர் அவனை ஜனக்கூட்டத்தைவிட்டு தனியே அழைத்துக்கொண்டுபோய் தம்முடைய விரலை அவன் காதுகளில் வைத்து உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான் (மாற். 7:32-35). வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்கு அற்புதத்தைச் செய்வார். உங்களுடைய ஜெபத்திற்கு நிச்சயம் பதில் உண்டு.
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்த மூன்றாவது சம்பவத்தை யோவான் 17ம் அதிகாரம் முதலாம் வசனத்தில் வாசிக்கிறோம். “இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்” என்றார்.
நம் அருமை ஆண்டவருடைய கண்கள் எப்போதும் பிதாவையே நோக்கிப்பார்த்துக்கொண்டிருந்தன. கல்வாரி சிலுவையிலேயும்கூட அவர் கண்கள் பரம பிதாவையே நோக்கிக்கொண்டிருந்தது. “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்றார். முடிவில் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சொல்லி பிதாவின் கைகளில் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுங்கள். உங்களுடைய கண்கள் எப்போதும் பரலோகத்தில் பதிந்திருக்கட்டும்.
நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).