Appam, Appam - Tamil

செப்டம்பர் 13 – கர்த்தருடைய இராஜ்யம்!

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக (லூக். 11:2).

“அப்பா, உம்முடைய இராஜ்யம் எங்களுடைய தேசத்தில் வருவதாக” என்று தமிழில் இந்த ஜெபம் அமைந்திருக்கிறது. ஆனால் கிரேக்க வேதாகமத்தில் கர்த்தருக்கு அன்போடு கட்டளையிடுவதுபோல, “வருவதாக உம்முடைய ராஜ்யம், செய்யப்படுவதாக உமது சித்தம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் வரும், நிச்சயமாக உலகத்திலுள்ள சகல சாம்ராஜ்யங்களும், ஆளுகைகளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், அவருடைய பரிசுத்தவான்களுக்கும் சொந்தமாகும். நியாயத்தோடும், நீதியோடும் ஆளுகை செய்யும் தேவ குமாரன் உலகத்தின் ஆளுகையின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அவர் பரிசுத்தவான்களோடு இணைந்து அரசாளுவார்.

நமது தேசத்தில் பல அலங்கோலங்களைப் பார்க்கும்போது, லஞ்ச லாவண்யங்கள், கொலைகள், கற்பழிப்புகள் ஆகியவை பெருகியிருப்பதைக் கண்டு கலங்கும்போது, ‘ஐயோ! கர்த்தருடைய இராஜ்யம் சீக்கிரமாய் வந்தால், எவ்வளவோ நன்றாய் இருக்கும்’ என்று எண்ணி ஏங்குகிறோம். கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய மிஷனெரி உயிரோடு எரிக்கப்பட்டபோது, இந்தக் காட்டுமிராண்டித்தனமான நிலைமைக்கு ஒரு முடிவு உண்டாகாதா, கர்த்தருடைய அன்பின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படாதா என்று ஏங்கினோம்.

புதிய ஏற்பாட்டில் சிமியோன் என்னும் பக்தன் நீதியும், தேவபக்தியும் உள்ளவனாக விளங்கினது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாய் இருந்தான். நாமும் கர்த்தருடைய இராஜ்யம் வருவதை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அன்னாள் தீர்க்கதரிசியும் வயதுமுதிர்ந்த நிலைமையிலும் எருசலேமின் மீட்பு உண்டாகக் காத்திருந்தாள் என்று வாசிக்கிறோம் (லூக். 2:38).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோவான்ஸ்நானன் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கித்திருப்பாரானால், இன்றைக்கு பரலோக இராஜ்யம் எவ்வளவு அதிக சமீபமாய் வந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, சாத்தானுடைய சாம்ராஜ்யத்திற்கு ஒரு முடிவு உண்டாக்குவார். கையினால் பெயர்க்கப்படாத கல்லாகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உலக சாம்ராஜ்யங்களை அடித்து உடைத்து அவர் ஒருவரே இராஜாதி இராஜாவாய், கர்த்தாதி கர்த்தாவாய் ஆளுகை செய்வார்.

“தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” (1 கொரி. 4:20). அந்த பெலன் உன்னதத்திலிருந்து வருகிற பெலன் (லூக். 24:49). பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் (அப். 1:8). அந்த பெலத்தினால்தான் கர்த்தருடைய இராஜ்யத்தை பூமியிலே நீங்கள் ஸ்தாபிக்க முடியும்.

‘உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்று நீங்கள் ஜெபிக்கும்போதெல்லாம், கர்த்தருடைய வல்லமை உங்கள்மேல் அளவில்லாமல் இறங்குவதாக. ஒரு பக்கம் சாத்தானுடைய ஆளுகையாகிய அந்தகார வல்லமைகளை நீங்கள் எதிர்த்து நில்லுங்கள். மறுபக்கம் கிறிஸ்துவின் இராஜ்யம் ஜனங்களுடைய உள்ளங்களிலே ஸ்தாபிக்கப்படும்படி சுவிசேஷத்தை அறிவியுங்கள்.

நினைவிற்கு:- “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (லூக். 11:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.