ஆகஸ்டு 30 – கனம்பண்ணுங்கள்!
“உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (எபே. 6:2,3).
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயானால் உனக்கு பூமிக்குரிய வாழ்க்கையிலே நன்மை உண்டாயிருப்பதுடன் உன் வாழ்நாளும் நீடித்திருக்கும் என்று கர்த்தர் திட்டமும் தெளிவுமாய் சொல்லுகிறார்.
பத்துக்கட்டளைகளை நாம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றிய பகுதி. அடுத்தது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பைப்பற்றிய பகுதி. முதலாவது, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கர்த்தரில் அன்புகூரவேண்டும். இரண்டாவது, உங்களை நேசிக்கிறதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும்.
உங்களுடைய வயதான நாட்களிலே உங்கள் பிள்ளைகள் உங்களை எப்படி கவனிக்கவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களோ, அதைப்போலவே, வயதான உங்கள் பெற்றோரை நீங்கள் கவனித்து, கனம்பண்ணவேண்டும். தகப்பனும், தாயும் மாபெரும் ஆசீர்வாதங்களாகும். அவர்கள் உங்களைப் பெற்றெடுத்தது முதல், வளர்த்து ஆளாக்குகிறதுவரையிலும் எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். நீங்கள் வியாதிப்பட்ட நேரங்களிளெல்லாம் கண்விழித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். கர்த்தருக்கு அடுத்தபடியாக கனம்பண்ணக்கூடியவர்கள் இந்த உலகத்தில் யாரேனும் உண்டென்றால் அது தகப்பனும், தாயும்தான்.
அப். பவுல் தீமோத்தேயுவுக்கு, “தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது” (1 தீமோ. 5:4) என்று எழுதியுள்ளார்.
பெற்றோரைக் கனப்படுத்துவது என்றால், ஏதோ மாதந்தோறும் கொஞ்சம் பணத்தை அனுப்பிவிடுவது என்பதல்ல. வயதான நாட்களில் அவர்களுக்குப் பாசமும், அன்பும் தேவை. அவர்களது உடல்நலம்குறித்தும், பிறதேவைகள்குறித்தும் அன்போடு விசாரிக்கவேண்டியது பிள்ளைகளின் கடமை. “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது” (கொலோ. 3:20) என்று வேதம் சொல்லுகிறது.
யாத்திராகம புத்தகத்தில் இன்னும் அதைத் தெளிவாகக் கர்த்தர் குறிப்பிடுகிறார். “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (யாத். 20:12). “தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்” (உபா. 27:16).
கர்த்தர் ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உங்கள்முன்வைக்கிறார். ஜீவனையும் மரணத்தையும் உங்கள்முன்வைக்கிறார். ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆசீர்வாதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவபிள்ளைகளே, உங்கள் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணி, நேசித்து, அன்பு செலுத்தும்போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு நீடிய ஆயுளைத் தந்து ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது” (சங். 103:4,5).