Appam

ஆகஸ்டு 20 – வல்லமையைத் தரித்துக்கொள்!

“எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரித்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் (ஏசா. 52:1).

ஒரு தகப்பன் தூங்கிக்கொண்டிருக்கிற தன் பிள்ளைகளை எழுப்பிவிடுகிறார். பள்ளிக்குச் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால் விரைவில் காலைக்கடன்களை நிறைவேற்றிவிட்டு புறப்படுமாறு பணிக்கிறார். ஆனால், பரலோக தேவன் “எழும்பு எழும்பு சீயோனே” என்று நம்மை எழுப்புவது சாதாரணக் காரியங்களுக்கு அல்லாமல் வல்லமையைத் தரித்துக்கொள்ளுவதற்காகும்.

ஒரு காவல்துறை அதிகாரி அவருடைய சீருடையை அணிந்துகொண்டாரென்றால், அவர் தன் கடமையாற்றப் புறப்பட்டுவிட்டார் என்று அர்த்தம். அவருடைய சீருடையிலே அவருக்குள்ள அரசாங்க அதிகாரம் தெளிவாகத் தெரியும். அவர் காவல் வாகனத்தில் புறப்பட்டு வருகிறார் என்றால், திருடர்களும், குற்றம் செய்தவர்களும் நடுங்குவார்கள். தேவனுடைய பிள்ளைகள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ வல்லமையைத் தரித்துக்கொண்டு கர்த்தருக்காக புறப்படும்போது, பாதாள உலகமும், பிசாசுகளின் குடும்பமும் நடு நடுங்கும்.

உங்களுக்குள் இருக்கிற வல்லமையைப் பார்த்து சாத்தான் நடுங்குவான். கர்த்தருடைய அக்கினி உங்களுக்குள் பற்றியெரிந்துகொண்டிருக்குமானால், அந்த அக்கினி அபிஷேகத்திற்கு முன்னால் அவனால் நிற்கவே முடியாது. அந்த உத்தரவாதத்தோடு வல்லமையை தரித்துக்கொள்ள எழும்புங்கள்.

ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகத்தில் “எழும்பு, எழும்பு” என்ற வார்த்தை மூன்றுமுறை இடம்பெறுகிறது. அவ்வார்த்தை தேவனுடைய பிள்ளைகளை அனல்மூட்டி எழும்பச்செய்கிறது. ‘எழும்பு, எழும்பு பெலன்கொள்’ (ஏசா. 51:9) என்று வேதத்தில் வாசிக்கிறோம். “கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?” (ஏசா. 51:9).

எகிப்தையும், எகிப்திலுள்ள பார்வோனையும் கர்த்தர் பத்து வாதைகளினால் வாதித்தார். கர்த்தரோடு இணைந்துநிற்க அவர் மோசேயை எழுப்பவேண்டியதாயிற்று. மோசேயின் கையிலே கோலைக் கொடுத்து இந்த வல்லமையை ஏற்றுக்கொள் என்பதுபோல உணர்த்தினார். அந்தக் கோலை கையிலே பிடித்துக்கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்கி மோசே வெற்றியோடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டார். நீங்கள் கர்த்தருக்காக அரியபெரிய காரியங்களைச் செய்யும்படி அவரது வல்லமையைத் தரித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் எழும்பிப் பிரகாசிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள்மேல் கர்த்தருடைய ஒளி வந்திருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை மரக்காலின்கீழே மறைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை அல்ல. அது மலையின்மேல் வைக்கப்பட்ட ஒரு பட்டணத்தின் வாழ்க்கை. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள். உங்களைப் பிரகாசிக்கச்செய்கிற வல்லமையைத் தரித்துக்கொண்டுதானாகவேண்டும்.

தேவபிள்ளைகளே, வல்லமையைத் தரித்துக்கொள்வது உங்களுடைய கையில்தான் இருக்கிறது. ஜெபத்திலும், ஸ்தோத்திரத்திலும், உபவாசத்திலும், தேவபிள்ளைகளின் ஐக்கியத்திலும் வல்லமை உண்டு. பரிசுத்தஆவியின் அபிஷேகத்தினால் அளவற்ற வல்லமை உண்டு. அப்படிப்பட்ட மேன்மையான வல்லமையைத் தரித்துக்கொள்ள முன்வாருங்கள்.

நினைவிற்கு:- “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத். 9:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6