ஜூலை 21 – ஒரு வாசஸ்தலம்!
“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவா. 14:2,3).
இயேசு கிறிஸ்து இந்த பூமியைவிட்டுக் கடந்து செல்லும்போது, நமக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவதாகச் சொன்னார். பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் இருக்கின்றன. சீயோன் பர்வதத்தைப் பார்க்கிறோம். அங்கே ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் பார்க்கிறோம் (வெளி. 14:1).
புதிய எருசலேமைப் பார்க்கிறோம். “அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி. 21:2) என்று வேதம் சொல்லுகிறது. இன்னும் புதிய பூமியைப் பார்க்கிறோம். இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் (வெளி. 21:24). புதிய வானத்தையும் காண்கிறோம். மேகம் போன்ற திரளான சாட்சிகள் அங்கே வருவார்கள் (எபி. 12:1). இப்படியாக பரலோகத்தில் பல்வேறு இடங்களைக்குறித்து கர்த்தர் வேதத்திலே சொல்லியிருக்கிறார்.
உங்களுக்காக நான் இருக்கும் இடத்திலே தனியாக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன் என்று கிறிஸ்து சொன்னார். அவர் நமக்காக ஆயத்தப்படுத்துகிற வாசஸ்தலம் எவ்வளவு மேன்மையுள்ளதாக, மகிமையுள்ளதாக விளங்கும்! கர்த்தர் ஆறு நாட்களிலே உலகத்தை எவ்வளவு அழகாக சிருஷ்டித்தார்! ஆறு நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த உலகமே இவ்வளவு அழகாக இருக்குமென்றால், கிறிஸ்து தம் மணவாட்டிக்காக உருவாக்குகிற நித்திய வாசஸ்தலங்கள் எவ்வளவு அழகாக இருக்கும்!
பிதாவின் வீட்டிற்கு பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் வருவார்கள். விசுவாசத்தில் பூரணப்பட்டவர்களெல்லாம் ஆபிரகாமினுடைய மடிக்கு வருவார்கள்; ஈசாக்கைப்போல தியானப் புருஷர்கள் ஈசாக்கின் மடிக்கு வருவார்கள். யாக்கோபைப்போல தேவனோடு போராடி மேற்கொள்ளுகிறவர்கள் யாக்கோபின் மடிக்கு வருவார்கள். ஏனோக்கைப்போல தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் ஏனோக்கின் மடிக்கு வருவார்கள்.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் எல்லாரும் கிறிஸ்துவின் தோழர்கள் எனப்படும் அனுபவத்திற்கு வருவார்கள். நாமோ கிறிஸ்துவின் மணவாட்டியாய் விளங்குவோம். நாம் அவருடைய இரத்தத்திற்கும், எலும்புக்கும் உரிமையானவர்கள் அல்லவா?
ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி அருள் செய்வேன் என்று கிறிஸ்து சொன்னார் அல்லவா? (வெளி. 3:21). தேவபிள்ளைகளே, அவருடைய சிங்காசனத்தில் நாம் அவரோடுகூட அமர்ந்திருப்போம்.
நினைவிற்கு:- “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி. 21:3).