Appam, Appam - Tamil

ஜூலை 14 – அக்கினிமயமான வாழ்க்கை!

“விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும் (நீதி. 26:20,22).

அக்கினி தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டுமானால், அங்கே விறகு எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். உங்களுடைய உள்ளத்தில் தேவ அன்பின் அக்கினி தொடர்ந்து பற்றியெரிந்துகொண்டிருக்கவேண்டுமானால், நீங்கள் கிறிஸ்துவைக்குறித்து மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும்.

“நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன்” (எரே. 5:14) என்று கர்த்தர் சொன்னார். எலியா வானத்திலிருந்து அக்கினி இறங்கப்பண்ணும்படி, ஜனங்களையெல்லாம் கர்மேல் பர்வதத்திலே கூடி வரச்செய்தார். என் கிட்டே வாருங்கள் என்று அழைத்தபோது சகல ஜனங்களும் அவன்கிட்டே வந்தார்கள் (1 இரா. 18:30).

அப்பொழுது எலியா விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்து ஜெபித்தபோது, “கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது” (1 இரா. 18:38).

இன்றைக்கும் கர்த்தர் அக்கினியைப் போட விரும்புகிறார். உங்களுடைய உள்ளத்திலும் ஜனங்களின் மத்தியிலும் கர்த்தரே தேவன் என்று நிருபிக்கும்படி பரலோக அக்கினியைப் போட விரும்புகிறார். பரிசுத்த ஆவியின் அக்கினியைப் போட விரும்புகிறார். மட்டுமல்ல, அது பற்றியெரியவேண்டுமென்றும் அவர் ஆவல் கொண்டிருக்கிறார் (லூக். 12:49).

கொர்நேலியு என்ற நூற்றுக்கு அதிபதியின் வீட்டிலே நின்று பேதுரு பிரசங்கித்தார். விறகுகளைப்போல ஏராளமான புறஜாதி மக்கள் கூடிவந்திருந்தார்கள். பேதுரு எழுந்து நின்று ஆவியும் ஜீவனுமான வசனங்களைப் பிரசங்கித்தபோது ஜனங்களின் மத்தியிலே அக்கினி பற்றியெரிந்தது. “வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்” (அப். 10:44).

இந்தக் காலம் அக்கினி அபிஷேகத்தின் காலம். மாம்சமான யாவர்மேலும் கர்த்தர் தம் அக்கினியை ஊற்றிக்கொண்டிருக்கிற காலம். தேசத்தில் அக்கினியின் அளவும், அபிஷேகத்தின் அளவும், பெருகிக்கொண்டேயிருக்கிறது. முதலாவது, அக்கினி இறங்க வேண்டும். இரண்டாவது, இறங்கின அக்கினி தொடர்ந்து பற்றிப்பிடித்து எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போடவேண்டும் (லேவி. 6:13).

தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் அக்கினிமயமான கர்த்தருக்கு முன்பாக வந்து நில்லுங்கள். உங்களைப் பிரகாசிப்பிக்கச்செய்கிறவரும், அக்கினி அபிஷேகத்தால் நிரப்புகிறவரும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலையாக்குவேன் என்று வாக்குத்தத்தம் செய்தவருமாகிய கர்த்தருக்கு முன்பாக எதிர்பார்ப்போடு வந்து நின்றுவிடுங்கள். அவர்மேல் இருக்கிற அக்கினி உங்கள்மேல் நிச்சயமாய் வந்து இறங்கும்.

நினைவிற்கு:- “நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” (சங். 39:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.