Appam, Appam - Tamil

ஜூலை 05 – இனிவரும் சத்தம்!

“பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும் (யோவா. 5:28).

வானாதிவானங்களை உண்டுபண்ணின கர்த்தர், நம்மோடு பலவிதங்களில் பேசுவார். இயற்கையின் மூலமாகவும் (சங். 19:1), வேதவசனங்கள் மூலமாகவும் (நீதி. 6:21,22), போதகர்கள் மூலமாகவும் (ஏசா. 30:20,21), சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலமாகவும் (யோவே. 2:28), அந்நியபாஷையின் மூலமாகவும் (ஏசா. 28:11), இன்னும் ஆயிரக்கணக்கான வழிகளிலேயும் கர்த்தர் பேசுவார். மரித்தோர் கேட்கும்படியாக வானத்திலிருந்து அவர்களோடும் அவர் பேசுவார்.

லாசரு மரித்து நான்கு நாளாகிவிட்டது. “லாசருவே, வெளியே வா” என்று கர்த்தர் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டபோது, மரித்த லாசரு உயிரோடு வெளியே வந்தான் (யோவா. 11:43). யவீருவின் மரித்த மகளை, “தலீத்தாகூமி சிறுபெண்ணே எழுந்திரு” என்று சொல்லி உயிரோடு எழுப்பினார் (மாற். 5:41). அதுபோல நாயீனூர் விதவையின் மகனை, “வாலிபனே, எழுந்திரு” என்று சொல்லி உயிரோடு எழுப்பினார் (லூக். 7:14). அவர்கள் எல்லாம் மரித்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுடைய செவி கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்ததால் உயிரோடு எழுந்துவிட்டார்கள்.

இந்த உலகத்திலே இதுவரை கோடானகோடிபேர் மரித்திருக்கிறார்கள். சமுத்திரத்தில் மூழ்கியும், தீயில் கருகியும், நோயினால் பாதித்தும், விபத்திலே சிக்கியும், யுத்தத்திலே சண்டையிட்டும் மரித்தவர்கள் அநேகர் உண்டு. எப்படி மரித்திருந்தாலும், “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” (தானி. 12:2) என்று வேதம் சொல்லுகிறது.

மரிக்கிற கடைசி நேரம் அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் எப்படி இருந்தது என்பதைப் பொறுத்துதான் அவர்களுடைய உயிர்த்தெழுதலும் இருக்கும். முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருந்து, கர்த்தரோடு அன்பிலே இணைக்கப்பட்டவர்கள், முதலாம் உயிர்த்தெழுதலிலே முதல் பலனாகக் காணப்படுவார்கள்.

“பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங். 116:15) என்றும், “நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்” (ஏசா. 57:2) என்றும் வேதம் சொல்லுகிறது. ஒருநாள் வரும். அப்பொழுது எக்காளங்கள் தொனிக்கும். பிரதான தூதன் சத்தமிடுவான். வானத்திலிருந்து பெரும்தொனியாய் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்.

வேதம் சொல்லுகிறது, “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” (யோவா. 5:28,29).

தேவபிள்ளைகளே, வானத்திலிருந்து தொனிக்கிற சத்தம் வல்லமையுள்ளது. அது உயிர்ப்பிக்கக்கூடியது. நீங்கள் மரித்த பிறகு, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்பதற்கு முன்பாக, உயிரோடு இருக்கும்போதே வானத்திலே பிறக்கிற சத்தத்திற்குச் செவிகொடுங்கள். உயிர்த்தெழுந்த வல்லமையோடு பரிசுத்த ஜீவியம் செய்யுங்கள். நீதிமான்களாய் விளங்குங்கள்.

நினைவிற்கு:- “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேது. 2:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.