ஜூன் 26 – அக்கினிஸ்தம்பம்!
“பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; …. என்பான்” (எண்.10:35).
இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுது புறப்படவேண்டுமென்று கர்த்தர் எண்ணினாரோ, அப்பொழுது பகலாயிருந்தால் மேகஸ்தம்பமும், இரவாயிருந்தால் அக்கினிஸ்தம்பமும் எழும்பும். தேவன் எழும்புகிறார் என்னும்போது அக்கினிஸ்தம்பம் எழும்புகிறது, உடன்படிக்கைப் பெட்டி எழும்புகிறது, இஸ்ரவேல் ஜனங்கள் எழும்புகிறார்கள். கர்த்தர் நமக்காக எழுந்திருக்கும்போது நாம் கர்த்தருக்காக எழுந்திருக்கவேண்டும்.
அக்கினிஸ்தம்பம் எழும்புகிற இரவு நேரத்தை மனக்கண்களுக்கு முன்பாக கொண்டுவாருங்கள். ஒரு பெரிய ராக்கெட்டை விண்வெளியில் சந்திர மண்டலத்திற்கு அனுப்பும்போது, தீயையும் அக்கினியையும் கக்கிக்கொண்டு அது உயரே செல்லும். செல்லுகிற இடமெல்லாம் புகை மண்டலமாயிருக்கும். கர்த்தர் எழுந்திருக்கும்போது ஒரு கோடி ராக்கெட்டுகள் எழும்புவதுபோன்று அத்தனை அக்கினி ஜுவாலையோடு அக்கினிஸ்தம்பமாக எழுந்தருளுவார். காட்டு மிருகங்கள், விஷ ஜந்துக்கள் அலறிக்கொண்டு ஓடிஒளியும். கொள்ளிவாய் சர்ப்பங்களும், தேள்களும் சுட்டெரிக்கப்படும்.
இரவிலே இருளை வெளிச்சமாக்கி, குளிரை வெப்பமாக்கி நல்ல சீதோஷ்ண நிலையோடு, பிரகாசமான வெளிச்சத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் நடப்பார்கள். கர்த்தர் நம்மோடு இருப்பதும், நம்மோடு எழுந்தருளுவதும், நம்மோடு தங்கியிருப்பதும் எத்தனை பாக்கியமானது! அக்கினிஸ்தம்பம் எழும்பும்போதெல்லாம் கர்த்தர் தங்களுக்காக எழும்புவதை அவர்கள் உணர்ந்தார்கள். சத்துரு வெள்ளம்போல வரும்போது ஆவியானவர் உங்களுக்காக கொடியேற்றுவார்.
கர்த்தர் எப்படிப்பட்டவர்? “அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது” (வெளி. 1:14). “அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச்சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்” (எசே. 1:27) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி எழுதுகிறார்.
மட்டுமல்ல, “அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” (தானி. 7:9,10) என்று வேதம் சொல்லுகிறது.
அந்த தேவன் சர்வவல்லமையுள்ளவராய் எழுந்தருளுவாரானால், அந்த காட்சி எவ்வளவு பிரகாசமாய் இருக்கும்! அவருடைய சத்துருக்கள் ஓடுவார்கள், சிதறடிக்கப்படுவார்கள். அவரைக் காணும்போது அசுத்த ஆவிகள் அலறி ஓடும். பில்லிசூனியங்கள் நொறுங்கி விழும். மந்திரக் கட்டுகள் எரிக்கப்பட்டுப்போகும்.
தேவபிள்ளைகளே, அந்த தேவன் நம்முடைய பட்சமாயிருக்கிறார். அவர் நம்மோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். அவர் நமக்காக எழுந்தருளுவார். அவர் நமக்கு அன்புள்ள தகப்பனாக இருக்கிறார். அவர் நம்முடைய விரோதிகளுக்கு பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கிறார் (எபி. 12:29).
நினைவிற்கு:- “நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சக. 2:5).