ஜூன் 19 – சம்பளம்!
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோம. 6:23).
மாதந்தோறும் நாம் செய்யும் வேலைக்கான ஊதியத்தைப் பெறுகிறோம். அந்த ஊதியத்தை வாங்கும்பொழுது நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகிறது. அந்த ஊதியத்தைக் கொண்டுவந்து குடும்பத்திற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்குகிறோம்.
அதைப்போலவே, நாம் பாவம் செய்யும்போதும் அதற்கான கூலியைப் பெறவேண்டியதாயிருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. விலக்கப்பட்ட கனியைப் புசிக்கவேண்டாம் என்று கர்த்தர் ஆதாமிடம் சொன்னபோது, கூடவே இதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும் சொன்னார். இந்த மரணம் ஆத்தும மரணம். அது மனுஷனை தேவனைவிட்டுப் பிரித்தது. அவனுடைய தொளாயிரத்து முப்பதாம் வருடத்தில் அவனுக்கு ஏற்பட்டது உலகப்பிரகாரமான மரணம். அதே நேரம் இரண்டாம் மரணம் என்று அழைக்கப்படுகிற அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலும் உண்டு.
பாவம் என்கிற வார்த்தை கிரேக்க மொழியிலே, “கமார்டியா” என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய அர்த்தம் இலக்கைவிட்டு விலகுவதாகும். தேவனுடைய திட்டத்தை, நோக்கத்தைவிட்டு விலகிச்செல்லுவதாகும். கர்த்தர் நியமித்த ஒழுங்குமுறையை அசட்டைபண்ணிவிட்டு செல்லுவதாகும். எப்படி ஒரு அம்பானது எய்யப்படும்பொழுது இலக்கைவிட்டு குறி தவறி செல்லுகிறதோ, அதுபோலவே தேவன் ஒரு மனுஷனுக்கு ஏற்படுத்திய நீதியின் பாதையிலிருந்து வழிதப்பிச் செல்லும்பொழுது அதுவே பாவமாகிறது.
ஒரு மனுஷன் தான் பாவம் செய்துவிட்டதை எப்பொழுது அறிகிறான்? ஆம், மனச்சாட்சியால் வாதிக்கப்படும்பொழுது அவன் பாவம் செய்கிறது அவனுக்குத் தெளிவாகப் புரிகிறது. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் கர்த்தர் தெய்வீகக் குரலாக மனச்சாட்சியை வைத்திருக்கிறார். நமக்கு மனச்சாட்சியோடுகூட வேத புத்தகத்திலுள்ள கட்டளைகளையும் தந்திருக்கிறார். மனசாட்சிக்கும், வேத வசனத்திற்கும் விரோதமாய் செய்யும் எந்த காரியமும் பாவமாகும்.
மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுகிற மூன்று கொடிய வல்லமைகள் உண்டு. முதலாவது உலகம், இரண்டாவது மாமிசம், மூன்றாவது பிசாசு. ஒரு காலத்தில் தேவதூதனாய் இருந்த பிசாசானவன் கர்த்தருக்கு விரோதமாய் பெருமைகொண்டவனாய் மேட்டிமையுடன் நடந்தபோது, வானத்திலிருந்து பூமியிலே தள்ளப்பட்டான். அன்று முதல் அவன் கர்த்தருக்கு விரோதமாய்ச் செயல்பட்டு வருகிறான். அவனே ஜனங்களை பாவம் செய்யத் தூண்டிக்கொண்டிருக்கிறான். “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவம் செய்கிறான்” (1 யோவா. 3:8).
ஆனால், ‘பாவம் செய்யாமல் வாழவே முடியாது. லஞ்சம் வாங்காமலோ, கொடுக்காமலோ ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது. நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள பாவம் செய்தே ஆகவேண்டியதிருக்கிறது. இதைத் தவிர்க்கமுடியாது’ என்று சிலர் தவறாக வாதிக்கிறார்கள். என்ன சமாதானம் சொன்னாலும் பாவம் பாவம்தான். அது தேவனுடைய கோபாக்கினையைக் கொண்டுவருகிறது. தேவபிள்ளைகளே, தேவன் எல்லா பாவங்களையும் நியாயத்தீர்ப்பிலே கொண்டுவந்து நிறுத்துவார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.
நினைவிற்கு:- “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது” (ஏசா. 59:2).