ஜுன் 04 – நறுமணத் தைலம்!
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (சங். 133:1,2,3).
‘ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்ட நல்ல தைலம்’ என்று இந்த வசனம் சொல்லுகிறது. ஆனால், கத்தோலிக்கர் பயன்படுத்தும் வேதாகமத்தில் அது ஆரோனுடைய தலையிலே ஊற்றப்பட்டு வழிந்தோடுகிற நறுமணத்தைலத்துக்கு ஒப்பாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அபிஷேக தைலமே நறுமணம் மிக்க தைலமாகும். எங்கே ஒருமனம் உண்டோ அங்கே நறுமணம் உண்டு. சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணும்போது மலர்க்கொத்திலிருந்து நறுமணம் காற்றிலே மிதந்து வருவதுபோல அபிஷேகத்தின் நறுமணம் தேசமெங்கும் வீசும். பூக்களின் நறுமணம் அது மலர்ந்திருக்கும் இடத்துக்கு வண்டினங்களை கூட்டிச்சேர்த்துவிடும்.
133-ம் சங்கீதம் ஒருமனப்பாட்டின் ஆசீர்வாதத்தை விளக்குகிற ஒரு சங்கீதமாயிருக்கிறது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது பழமொழி. பல மலர்கள் ஒன்றுபடும்போது அழகான மாலையாக மாறுகிறது. மலரோடு பின்னிப்பிணையும் நாரும் மணம் பெறுகிறது.
அதுபோல பரிசுத்தவான்களோடும், தேவனுடைய பிள்ளைகளோடும் ஒருமனமாய் இணைக்கப்பட்டு ஐக்கியம்கொள்ளும்போது நாமும் நறுமணத்துடன் திகழுவோம். கர்த்தர் அந்த நறுமணத்தை சுகந்த வாசனையாக முகர்ந்துகொள்ளுவார். அதற்காகவே சபை கூடுதலை கர்த்தர் வைத்திருக்கிறார்.
ஒருமுறை ஒரு இஸ்லாமிய சகோதரி தனக்கு சபை கூடிவருவதில் பங்குபெற பாக்கியம் இல்லையே என்று கண்ணீர் சிந்தினார்கள். அதிக பக்தி வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து பின்னர் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது கணவனுக்கு அவர் இரட்சிக்கப்பட்டதும், இயேசுவை ஏற்றுக்கொண்டதும், அவரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதும் தெரியாது.
குளியலறையே அவருடைய ஆலயமாயிருந்திருக்கிறது. அங்கே தண்ணீரை திறந்துவிட்டு அந்த சத்தத்தோடு தன்னுடைய இருதயத்தையும் இணைத்து கர்த்தரை ஆராதித்து துதித்து வந்திருக்கிறார். அதே நேரம் அவரது உள்ளமானது உலகமெங்குமுள்ள பரிசுத்தவான்களோடு ஆவியிலே இணைக்கப்பட்டு, அவர்களும் தன்னோடு இணைந்திருப்பதாகக் கருதி அவர் ஆராதித்திருக்கிறார்.
பரலோகத்திலிருக்கிற பரிசுத்தவான்களோடும், தேவ தூதர்களோடும்கூட அவர் தன் இருதயத்தை இணைத்திருக்கிறார். கர்த்தருடைய குடும்பம் எவ்வளவு இனிமையானது என்று சொல்லி அவர் கண்ணீர் சிந்தினார்.
ஆம்! அவர் ஒரு அந்தரங்க லீலிபுஷ்பம். தேவபிள்ளைகளே, கர்த்தரை விடுதலையோடு ஆராதிக்க கிடைத்திருக்கும் தருணத்தை பயன்படுத்திக்கொள்வீர்களா?
நினைவிற்கு:- “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களிடத்திற்கும், ….. ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22,24).