நவம்பர் 26 – ஜெபிக்கவேண்டும்!
“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவா. 16:24).
ஜெபிக்கவேண்டும் என்ற உள்ளூர உணர்வை உங்களுக்குள் தட்டியெழுப்புங்கள். சிறந்த ஜெப வீரனாக விளங்க வேண்டுமே என்கிற ஏக்கம் உங்களுக்கு இருக்கட்டும். ஜெப ஆர்வத்தைத் தூண்டுகிற புத்தகங்களை வாசியுங்கள். ஜெபத்தை உங்களுடைய ஒவ்வொரு இருதயத் துடிப்போடும், சுவாசத்தோடும் இணைத்துவிடுங்கள்.
வயதான ஒருவர் புதிதாக இரட்சிக்கப்பட்டார். ஜெபிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. ஆனால் ஜெபிக்கத் தெரியவில்லை. அவருடைய போதகர் அவரிடம் வந்து, “ஐயா, ஜெபம் என்பது மிகவும் எளிதானது. கர்த்தரோடு மனம்விட்டு பேசுவதுதான் ஜெபம். நீங்கள் எப்பொழுதும் காலையில் எழுந்ததும் உங்கள் அருகிலே ஒரு நாற்காலியைப் போட்டு அந்த நாற்காலியிலே இயேசுகிறிஸ்து அமர்ந்திருப்பதைப்போல எண்ணிக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுடைய நண்பர்களிடம் எப்படி மனம்விட்டு உற்சாகமாய் பேசிக்கொண்டிருப்பீர்களோ, அதைப்போலவே கிறிஸ்துவையும் நண்பராக எண்ணி எல்லாவற்றையும் பேசுங்கள். உங்களுடைய பிரச்சனைகளைச் சொல்லுங்கள், போராட்டங்களை அறிவியுங்கள். அவர் உங்களை சிநேகிதர் என்று அழைத்திருக்கிறார். ஆகவே, தைரியமாய் அவரை நீங்கள் கிட்டிச் சேரலாம்” என்று சொன்னார்.
அன்று முதல் அவர் தனக்கு முன்பாக ஒரு நாற்காலியைப் போட்டு அதில் இயேசு அமர்ந்திருப்பதாக எண்ணி நண்பரிடம் பேசுவதுபோல இயேசுவோடு பேச ஆரம்பித்தார். அப்படிப் பேசப்பேச அவருக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. அது அதிக சந்தோஷத்தையும் தந்தது. கர்த்தர் தன் ஜெபத்தைக் கேட்கிறார் என்கிற எண்ணம் பரவசமூட்டியது. எங்கே போனாலும் அந்த நாற்காலியைக் கூடவே தூக்கிக்கொண்டு போக ஆரம்பித்தார். சாப்பிடும்போது சாப்பாட்டு மேஜைக்கு அருகே போட்டிருப்பார். இரவிலே படுக்கும்போது படுக்கையின் அருகிலே போட்டிருப்பார். இது இயேசுகிறிஸ்துவுக்கான நாற்காலி. ஒருவரும் உட்காரக்கூடாது என்று சொல்லுவார்.
அவர் வயது முதிர்ந்தவராகி மிகவும் வியாதிப்பட்டபிறகும்கூட அவருடைய கண்களுக்கு முன்பாக அந்த நாற்காலி எப்பொழுதும் இருந்தது. கர்த்தரை எனக்கு முன்பாக எப்பொழுதும் வைத்திருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று சொன்னார். சில நாட்களுக்குப் பின்பு அவருடைய பேச்சு நின்று விட்டது. அவர் மரிக்கிற நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டி அந்த நாற்காலியின்மேல் வைத்தார். அவருடைய ஜீவன் போயிற்று. எத்தனை அருமையான நட்புறவு அது!
கர்த்தரை அன்போடு நோக்கிப்பார்ப்பதும்கூட ஒரு ஜெபம்தான். “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசா. 45:22) என்று கர்த்தர் சொன்னார். “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங். 121:1,2) என்றார் தாவீது! தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து உங்கள் அருகில் நின்று உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய் தொடர்ந்து ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்” (யோவா. 16:23).