நவம்பர் 20 – நீதிமொழிகள்!
“தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்” (நீதி.1:1).
வேதப்புத்தகத்தில் ஞானத்தின் மொழிகளும், நீதியின்மொழிகளும், உபதேசமொழிகளும், எச்சரிக்கையின் மொழிகளும் உண்டு. வேதத்தில் நீதிமொழிகள் புத்தகத்திலே மொத்தம் முப்பத்தொரு அதிகாரங்கள் இருக்கின்றன. ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்டு, அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மொத்தம் முப்பத்தொரு நாட்கள் வருகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் வீதம் வாசித்தால் மாத முடிவுக்குள் முப்பத்தொரு அதிகாரங்களையும் வாசித்து முடித்துவிடலாம். சில மாதங்களில் முப்பது நாட்களோ, இருபத்தெட்டு நாட்களோ வருமென்றால் மீதமுள்ள அதிகாரங்களை கடைசி நாட்களில் வாசித்து முடித்துவிடுவது நலம் பயக்கும்.
அநேக சபைகளில் போதகர்மார் தங்களுடைய சபையார் ஒரு நாளைக்கு ஒரு அதிகாரமாவது நீதிமொழிகளின் புத்தகத்திலிருந்து வாசிக்க வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறார்கள். ஏனென்றால் “இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை …. அறிந்துகொள்வான்” (நீதி. 1:2-6).
நீதிமொழிகளில் முக்கியமான வார்த்தை “ஞானம்” என்பதாகும். வாழ்க்கையை வளமாய் வாழ தேவன் கொடுக்கும் ஆலோசனையே ஞானம் ஆகும். பாவமும், துன்மார்க்கமும், அக்கிரமமும் நிறைந்த உலகத்திலே ஒரு மனிதன் பரிசுத்தமாய் வாழ ஞானம் அவசியம். நீதிமொழிகள் புத்தகம் மனிதனுக்கும் தேவனுக்குமிடையே உள்ள உறவையும் சொல்லியிருக்கிறது. மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே இருக்கிற உறவையும் சொல்லியிருக்கிறது. இங்கே பெற்றோருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகளும் உண்டு.
நீதிமொழிகள் புத்தகத்திலுள்ள அனைத்தையும் எழுதினது சாலொமோன் அல்ல. நீதிமொழிகள் புத்தகத்தின் முப்பதாம் அதிகாரத்தை எழுதியது, “யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்கள்” (நீதி. 30:1) ஆகும். அதுபோல முப்பத்தோராம் அதிகாரம் “ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேது. 1:20,21).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு அருளிச்செய்த வார்த்தைகளாகவே வாசித்து நீதிமொழிகளின் முழு பயனையும் அடைவீர்களாக.
நினைவிற்கு:- “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோ.3:16,17).