Appam, Appam - Tamil

நவம்பர் 19 – பாவத்திலிருந்து விடுதலை!

“நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23).

பாவம் கொடூரமானது. துணிகரமான பாவங்கள் குடும்பத்திற்கு சாபத்தைக் கொண்டுவருகின்றன. வியாதியைக் கொண்டுவருகின்றன. முடிவிலே தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாகவும் கோபாக்கினைக்கு முன்பாகவும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பாவம் ஒரு பயங்கரமான பளுவான கல்லைப்போல மதியீனனுடைய கழுத்தை பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

“மனந்திரும்புங்கள்” என்று யோவான் ஸ்நானன் எவ்வளவு கண்டிப்பாய் பிரசங்கித்தார்! மனந்திரும்ப விருப்பமில்லாத பரிசேயர் சதுசேயரைப் பார்த்து, “விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைக்காட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” (மத். 3:7,8) என்று எச்சரித்தார். மனந்திரும்பாமல் போனால் என்ன நடக்கும்? “கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” (மத். 3:10).

இயேசுகிறிஸ்துவும்கூட மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார். மனந்திரும்புதலை சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார். அப்போஸ்தலர்கள் மனந்திரும்புதலைக்குறித்தே அதிகமாய் பிரசங்கித்தார்கள்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:9,7).

அநேகர் பாவ பழக்கங்களுக்கு அடிமையாய் இருக்கிறார்கள். மனந்திரும்பவேண்டும் என்றால் பாவ பழக்கவழக்கங்களிலிருந்தும் ஒரு விடுதலை தேவை. விடுதலை பெற்றுக்கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகள் உண்டு. முதலில் தேவகுமாரன் தரும் விடுதலை. “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36).

இரண்டாவதாக, சத்தியம் தரும் விடுதலை. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32). மூன்றாவதாக, ஆவியானவர் தரும் விடுதலை. “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

பாவத்தைவிட்டு ஒருவன் மனந்திரும்பும்போது அவனுடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது. தேவனுடைய பிள்ளையாகிவிட்டோம் என்ற பெரிய மகிழ்ச்சி! குடும்பத்திலே சமாதானம் சந்தோஷம் உண்டாவதோடல்லாமல் பரலோகத்திலும்கூட ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டாகும். “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.15:7).

நினைவிற்கு:- “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவா. 3:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.