நவம்பர் 07 – இயற்கையின் மூலமாய்!
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்.19:1).
வானங்கள் அமைதியாய் இருப்பதைப்போலத் தோன்றினாலும், இந்த உலகத்துச் சத்தங்கள் அவைகளுக்கு இல்லாமல் இருந்தாலும், அவைகள் மௌனமாய் தேவனுடைய மகிமையைக்குறித்து நம்மோடு பேசுகின்றன. அவருடைய கரங்களின் கிரியைகளை நமக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கின்றன. “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோம. 1:20).
சில வேளையில் வானத்திலுள்ள மேகக்கூட்டங்கள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஒரு பெரிய மேகம் மேய்ப்பனைப்போலவும் காட்சியளிப்பதுண்டு. “நானே நல்ல மேய்ப்பன், உனக்காக ஜீவனைக் கொடுத்த நான் உன்னை அருமையாய் நடத்துவேன்” என்று மேகத்திலிருந்து அவர் அன்போடு பேசுவதைப்போல உணருகிறோம்.
ஆகாயத்துப் பட்சிகள்மூலமாய் அவர் நம்மோடு பேசுகிறார். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை. அவைகளைப் பிழைப்பூட்டுகிற நான் உங்களுக்கு பிழைப்பூட்டமாட்டேனா, நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா என்று கர்த்தர் சொல்லுகிறார் (மத். 6:26,27). காட்டுப்புஷ்பங்கள் மூலமாகவும் அவர் பேசுகிறார். அவைகளை கவனித்துப் பாருங்கள். கர்த்தருடைய குரலை அந்தப் புஷ்பங்களிலும் நாம் கேட்க முடியும். “சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை” (மத். 6:29) என்று அவர் அன்போடு கூறுகிறார்.
கடற்கரையைப் பாருங்கள். கடல் அலைகள் சீறிக் கொண்டு கரையில் மோதுகின்றன. “என் பிள்ளைகளே, கடல் அலைகளுக்கு ஒரு எல்லையைக் குறித்திருக்கிறேன். இம்மட்டும் வா, இதை மிஞ்சி வராதே என்று அதற்கு கட்டளையிட்டிருக்கிறேன். அதைப்போலவே உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு போராட்ட அலைகள் வந்தாலும் அவைகளுக்கு ஒரு எல்லை உண்டு. உங்களுடைய திராணிக்கு மிஞ்சி நான் உங்களை சோதிக்கிறவர் அல்ல” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திராட்சச்செடியைப் பாருங்கள். கர்த்தருடைய குரல் நம்முடைய காதுகளில் ஒலிக்கிறது. “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்” (யோவா. 15:1). எத்தனை அருமையான உறவுமுறை! ‘என் மகனே, மகளே, நீ என்னில் நிலைத்திருந்தால் உன் வாழ்க்கை கனிதரும் வாழ்க்கையாக மாறும். நீ அதிகமான கனிகளைக் கொடுப்பாய். என்னில் பிதாவானவர் மகிமைப்படுவார்’.
சூரிய உதயத்தைப் பாருங்கள். அஸ்தமனத்தையும் பாருங்கள். அவைகள் காலங்களின் முடிவுகளைக்குறித்து உங்களோடு பேசும். “அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” (மத்.16:2,3).
நினைவிற்கு:- “அதிலே (அத்திமரத்திலே) இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” (மத். 24:32).