நவம்பர் 02 – கர்த்தருடைய மகிமை!
“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:1,2).
காலங்கள் செல்லச் செல்ல இந்த உலகமானது இருளையும், காரிருளையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்திக்கிறிஸ்துவின் மிருகத்தனமான ஆட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்தகார வல்லமைகள் பெலன்கொள்ளுகின்றன. சாத்தான் அநேகரை வஞ்சிக்கத்தக்கதான பெரிய அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறான்.
அதே நேரத்தில், நாம் கர்த்தருடைய மகிமையான வருகையை எதிர்கொண்டு தீவிரித்துக்கொண்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்து பிதாவின் மகிமை பொருந்தினவராய் பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தோடு வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடு இருக்கும் நாமும் மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்பட்டு அவரோடுகூட இருப்போம்.
இருளும் காரிருளும் உலகத்தை மூடும்போது, கர்த்தருடைய மகிமை உங்கள்மேல் உதிப்பதின் நோக்கம் என்ன? நீங்கள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்கவேண்டும் என்பதே. “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).
நீங்கள் ஆண்டவருக்கென்று வல்லமையாக ஊழியம் செய்ய வேண்டுமானால், இந்தக் கிருபையின் காலமே அருமையான காலமாகும். கர்த்தருக்காக எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழையுங்கள். சுவிசேஷத்தை எவ்வளவுபேருக்கு அறிவிக்க முடியுமோ அவ்வளவுபேருக்கு அறிவித்துவிடுங்கள்.
உங்கள்மேல் உதிக்கும் கர்த்தருடைய மகிமையிலே ஒரு வெளிச்சம் உண்டு. ஜோதிப்பிரகாசமும் உண்டு. இருளிலிருந்து வெளிச்சத்தைப் புறப்படப்பண்ணின ஆண்டவர் உங்களை ஜனங்கள்மேல் பிரகாசமாக வைப்பார். கர்த்தர் சிருஷ்டிப்பிலே, இரவு நேரத்தில் வெளிச்சம் காட்டுவதற்கு சந்திரனையும், நட்சத்திரங்களையும் உருவாக்கினதுபோல, உங்களையும் இருளுள்ள உலகத்திற்கு சுடராகப் பிரகாசமாக வைத்திருக்கிறார்.
பாவம் என்பது இருளாகவும், சுவிசேஷம் என்பது வெளிச்சமாகவும் இருக்கின்றன. பாவம் மனிதனுடைய ஆத்துமாவில் இருளைக் கொண்டுவருகிறது. அந்தகார லோகாதிபதி அநேகருடைய மனக்கண்களைக் குருடாக்கி இருளிலே கட்டி வைத்திருக்கிறான். நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, சுவிசேஷத்தின் மகிமையான ஒளியானது அந்தகாரத்தை அகற்றி, பரலோக வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. அப்பொழுது மனிதன் நித்தியத்தைக்குறித்து அறிந்துகொள்ளுகிறான். ஒளிமயமான பரலோக தேசத்தைக்குறித்து அறிந்துகொள்கிறான்.
தேவபிள்ளைகளே, உங்களிலுள்ள பிரகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கட்டும். அப்பொழுது வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுவீர்கள். மகிமையின் சுவிசேஷத்தை முழு மூச்சாய் ஜனங்களுக்குப் பிரசங்கியுங்கள். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது.
நினைவிற்கு:- “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).