Appam, Appam - Tamil

ஜூலை 16 – இன்றைக்கு காரியம்!

“என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும் (ஆதி. 24:12).

சில காரியங்கள் தடைபட்டுக்கொண்டே இருக்கின்றன. நீண்ட நாட்களாய் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் காலதாமதமாகிக்கொண்டே இருக்கிறது. எலியேசர் ஜெபித்ததைப்போல நாமும் ஜெபிப்போமாக!

கர்த்தரே காரியத்தை வாய்க்கப்பண்ண வேண்டும். இல்லையென்றால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நேரமும் பணமும் முயற்சியும் வீணாகத்தான்போகும். காரியத்தை சித்திக்கப்பண்ணுகிறவர் கர்த்தர். ஆகவே, எதற்கு நாம் முயற்சித்தாலும், “ஆண்டவரே, இன்றைக்கு என்னுடைய காரியத்தைச் சித்திக்கப்பண்ணும்” என்று மனதுருகிக் கேட்போமாக!

ஆபிரகாம் தன்னுடைய விசாரணைக்காரனாகிய எலியேசருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருந்தார். தன்னுடைய மகனாகிய ஈசாக்குக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையான பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டியதே அந்த பொறுப்பு. திருமண காரியத்தை ஒழுங்கு செய்யவேண்டிய பொறுப்பு. குணசாலியான ஸ்திரீயைத் தேடும் முயற்சியில் எலியேசர் புறப்பட்டபோது அவர் ஒரு உருக்கமான ஜெபம்பண்ணினார். “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்” (ஆதி. 24:12) என்பதே அந்த உருக்கமான ஜெபம்.

அந்த ஜெபத்தை உடனடியாகக் கர்த்தர் கேட்டார். எலியேசர் மனதிலே வைத்திருந்த எண்ணத்தின்படியே ரெபெக்காள் தோன்றி அவனுக்கும் அவனது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள். குணசாலியான பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டார். கர்த்தர் காரியத்தை வாய்க்கச்செய்தவுடன் அவர் “தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, …. என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்” (ஆதி. 24:48) என்று சொல்லி தேவனைத் துதித்தார்.

உங்களுடைய பிள்ளைகளுடைய திருமணம் ஒருவேளை தடைபட்டுக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் வீடு கட்ட எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் கைக்கூடாமலே போயிருக்கக்கூடும். உங்களுடைய பிள்ளைகளுடைய வேலை வாய்ப்புகள், எதிர்கால முன்னேற்றங்களில் பலர் தடைகளை கொண்டுவந்திருக்கக்கூடும்.

கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்கு காரியத்தைச் சித்திக்கப்பண்ணும் என்று எலியேசரைப்போல ஜெபியுங்கள். நிச்சயமாகவே, கர்த்தர் தூர இடத்திலிருந்து வருகிற நற்செய்தியினால் உங்களை மகிழச்செய்வார். அதிசயமான ஒரு பாதையைக்காட்டி, அதிலே கர்த்தர்தாமே உங்களைக் கரம்பிடித்து நடத்திச் செல்வார்.

சந்தோஷப்பட்டுக் கர்த்தரைத் துதியுங்கள். இன்றைக்கு உங்களுடைய பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உங்களுடைய உள்ளத்தை நிரப்பும். ‘கர்த்தர் என் பாரத்தைக் ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பெடுத்து நடத்துவார். எல்லாம் நன்மையும் செம்மையுமாக விளங்கும்’ என்கிற விசுவாசம் உங்களுடைய உள்ளத்தில் வரும். அப்பொழுது கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்துங்கள். தேவபிள்ளைகளே, இன்றைக்கு காரியம் சித்தியாகும் நாள்.

நினைவிற்கு:- “இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்” (1 சாமு. 11:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.