ஜூலை 11 – வேறொரு அடையாளம்!
“அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது” (வெளி. 12:3).
ஆதியாகமம் புத்தகத்தில், “ஆதியிலே” என்ற வார்த்தையோடு வேதாகமம் துவங்கி, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் பின்பகுதியில் “வானத்திலே” என்ற வார்த்தை அடிக்கடி இடம்பெறும்வகையில் முடிவடைகிறது. தங்கள் ஆரம்பத்தை கிறிஸ்துவோடு ஆரம்பிக்கிறவர்கள், நிச்சயமாகவே வானமாகிய பரலோகத்தில் இடம்பெறுவார்கள் என்பதையே இது உணர்த்திக்காட்டுகிறது.
வானம் என்பதற்கு, ஆகாயவிரிவு என்றும், உன்னதம் என்றும், பரலோகம் என்றும், பல அர்த்தங்கள் உண்டு. ஆகாயத்துப்பறவைகள் பறந்து திரிகிற வானம் உண்டு. சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள் இயங்குகிற வானம் உண்டு. சாத்தான் தன் குடியிருப்பாய் வைத்திருக்கிற வானமண்டலம் உண்டு. அதே நேரம் பரதீசியாயிருக்கிற வானம், புதிய பூமியிருக்கும் வானம், புதிய வானம் என்று சொல்லப்படும் பரலோக இராஜ்யம் இருக்கிற வானமும் உண்டு.
கர்த்தருடைய வருகைக்கு அநேக அடையாளங்கள் இருக்கிறதுபோல, சாத்தானாகிய அந்திக்கிறிஸ்து பூமிக்கு இறங்கி வருகிறதற்கும் அநேக அடையாளங்கள் இருக்கின்றன. அவன் வானத்திலே தன்னுடைய சிங்காசனத்தை அமைத்து, வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை தனக்கென்று வைத்திருக்கிறான். நாம் கிறிஸ்துவினுடைய வருகையின் அடையாளங்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவரைச் சந்திக்க ஆயத்தமாகிற அதே வேளையில், அந்திக்கிறிஸ்துவினுடைய அடையாளங்களைப் பார்த்து எச்சரிப்புடனிருப்பது மிகவும் அவசியம்.
அப். பவுல் சொல்லுகிறார்: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்” (2 தெச. 2:9,10).
இன்றைக்கு முழு ஐரோப்பிய தேசமும் தங்களை சமாதானமாய் அரசாளுவதற்கு ஒரு சர்வாதிகாரி வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஒரே நாணயம், ஒரே விசா, ஒரே பாஸ்போர்ட், ஒரே இராணுவம் என்று உருவாகிக்கொண்டிருக்கிறது. உலகத்தை ஆளப்போகிற அதிபதிக்கென்று ஒரு இடத்தையும், அவன் உபயோகப்படுத்துவதற்கென்று மிகவும் சக்தி வாய்ந்த கணினியையும் உருவாக்கியிருக்கிறார்கள். வானத்தின் அடையாளங்களைப் பார்த்து, நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்கு ஆயத்தமாகவேண்டும். அல்லது, அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு ஆயத்தமாக வேண்டும்.
தேவபிள்ளைகளே, வெளிப்படுத்தின விசேஷத்தை திரும்பத் திரும்ப வாசித்துப்பாருங்கள். அந்த புத்தகம் நிச்சயமாகவே உங்களை இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்தும். இரண்டாம் வருகை மிகச்சமீபம் என்பதற்கான அடையாளங்கள் துல்லியமாகத் தெரியத் துவங்கிவிட்டதால் இப்பொழுதே கர்த்தருடைய வருகைக்கு மிகுந்த பயபக்தியோடு ஆயத்தமாகுங்கள்.
நினைவிற்கு:- “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக். 21:36).