ஜூலை 02 – மனித சத்தம்!
“ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி….” (1 இரா. 12:13).
சாலொமோன் ராஜா மரித்த பின்பு சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமிடம் ஜனங்கள் வந்து, “உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்” (1 இரா. 12:4) என்று சொன்னார்கள்.
ஆனால் ரெகொபெயாம் அந்த வயதுமுதிர்ந்தவர்களுடைய ஆலோசனையைக் கேட்காமல் அனுபவம் இல்லாத வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்கு கடினமான உத்தரவு கொடுத்தபடியால், இஸ்ரவேல் தேசத்திலுள்ள பன்னிரண்டு கோத்திரங்களிலே பத்து கோத்திரங்கள் அவரைவிட்டுப் பிரிந்து போய்விட்டன. மாம்சீகமான ஆலோசனை பிரிவினைக்கும் அழிவுக்குமே வழிவகுக்கும்.
தேவஊழியர்கள் ஜெபித்து அருமையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். பயபக்தியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றி வாழ்க்கையின் இரகசியங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய பிள்ளைகள் நல்ல ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவேண்டும். ஆவிக்குரிய பகுத்துணர்கிற வரத்தால் எது சிறந்த வழி என்பதைப் பகுத்துணரத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சில வேளைகளில் மனித சத்தங்கள் ஒன்றோடொன்று எதிரிடையாய் இருக்கக்கூடும். ஆபிரகாமுடைய வாழ்க்கையிலே ஈசாக்கு பிறந்தபோது, மூத்த மகனாகிய இஸ்மவேல் ஈசாக்கை பரியாசம்பண்ணுகிறதை சாராள் கண்டு “இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது” (ஆதி. 21:10,11).
ஒரு பக்கம் சாராளின் சத்தமும், மறுபக்கம் மூத்த மகன் மேலுள்ள பாசத்தின் சத்தமும் ஆபிரகாமை எட்டின. ஆபிரகாம் இஸ்மவேலை நேசித்தபடியால் அவனைப் புறம்பே தள்ளுவது கடினமான காரியமாய் இருந்தது. எந்த சத்தத்திற்கு செவி கொடுப்பது, என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் தேவசமுகத்திற்குச் சென்றார், “சாராள் உனக்குச் சொல்லுவதையெல்லாம் கேள்” என்று கர்த்தர் சொன்னபோது வேறு வழியில்லாமல் இஸ்மவேலையும் ஆகாரையும் அனுப்பிவைத்தார்.
அதே நேரத்தில் எல்லா வேளைகளிலும் மனைவியின் சொல்லைக் கேட்டு நடக்க முடியாது. யோபு பக்தனின் மனைவி துயர நேரத்தில், “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9). இந்த வார்த்தைக்கு எப்படிச் செவிகொடுப்பது? யோபு தன் மனைவியைக் கடிந்துகொண்டார்.
தேவபிள்ளைகளே, என்ன முடிவு எடுப்பது என்று தெரியாத நேரங்களிலெல்லாம் தேவசமுகத்திற்குப் போய்விடுங்கள். கர்த்தருடைய ஆலோசனையின் சத்தத்தைக் கேட்க ஜெபத்துடன் காத்திருங்கள். அவர் உங்களுக்குப் போதித்து, நீங்கள் நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார்.
நினைவிற்கு:- “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா. 28:1).