Appam, Appam - Tamil

செப்டம்பர் 30 – தேவனுடைய விரல்!

“அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள்” (யாத். 8:19).

மோசே பார்வோனுக்கு முன்பாக அநேக அற்புதங்களைச் செய்தார். வாதைகளினால் எகிப்தை வாதித்தார். இதைப் பார்த்த எகிப்து தேசத்திலுள்ள மந்திரவாதிகளும் சில அற்புதங்களைச் செய்தார்கள். மோசே புழுதியின்மேல் அடித்தபோது, பூமியின் புழுதி எல்லாம் பேன்களாயிற்று. இப்படிச்செய்ய மந்திரவாதிகளால் கூடாமல்போயிற்று. ஆகவே இது தேவனுடைய விரல் என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆம், தேவனுடைய விரல்கள் மோசேயோடு இணைந்து செயல்பட்டதை அவர்கள் கண்டுகொண்டார்கள். மனிதன் செய்யும் செயல்கள் கொஞ்சமானவை. பிசாசின் துணைகொண்டு மந்திரவாதிகள் செய்யும் செயல்களும் ஒரு வரம்புக்குட்பட்டவையே. ஆனால் கர்த்தருடைய விரல்கொண்டு செய்யும் அற்புதங்களோ, யாராலும் செய்யக்கூடாத மகா உன்னதமானவை.

கர்த்தர் உங்கள் கைகளிலே மொத்தம் பத்து விரல்களைக் கொடுத்திருக்கிறார். இந்தக் கைகளினால் உங்களுடைய குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள், பிரயாசப்படுகிறீர்கள். உங்களுடைய கைகளைக் கர்த்தருடைய கைகளோடு இணைத்துக்கொள்ளும்போது, எப்படி அப். பவுலின் கைகளைக்கொண்டு கர்த்தர் விசேஷித்த அற்புதங்களைச் செய்தாரோ, அதுபோல உங்களுடைய கைகளைக்கொண்டும் விசேஷித்த அற்புதங்களைச் செய்வார்.

கர்த்தருடைய விரல்கள் சிருஷ்டிக்கும் விரல்கள். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும்” (சங். 8:3) என்று சொல்லி தாவீது வியந்து போற்றுகிறார். கர்த்தர் தன் விரல்கொண்டு ஸ்தாபித்த அனைத்திலும் அவருடைய அனந்த ஞானமும், மகா வல்லமையும், கிருபையும் வெளிப்படுகிறது. கர்த்தர் சிருஷ்டித்த சிருஷ்டிப்புகள் கோடான கோடி வருடங்களாய் நிலைக்கின்றன. நீங்கள் அவருடைய கையின் கிரியைகளாய் அற்புதமான சிருஷ்டிப்பாய் இருக்கிறீர்களே!

இரண்டாவதாக, கர்த்தருடைய விரல்கள் பரிசுத்தமானவை. அந்தப் பரிசுத்த விரல்களைக்கொண்டு இஸ்ரவேலரின் பரிசுத்தமான வாழ்க்கைக்காக கர்த்தர் பத்துக் கட்டளைகளை எழுதிக்கொடுத்தார் (யாத். 31:18). கற்பலகையிலே விரலைக்கொண்டு எழுதுவது எவ்வளவு கடினமானது! ஆனால், தேவனுடைய விரல்கள் அக்கினிமயமான எழுத்துக்களை அந்தக் கற்பலகைகளில் பொறிப்பதற்கு வல்லமையுள்ளதாய் இருந்தன.

இன்றைக்கு கர்த்தர் தம் கட்டளைகளை கற்பலகையில் அல்லாமல் உங்கள் இருதயத்திலும், மனசாட்சியிலும் எழுதட்டும். அக்கினி மயமான ஆவிக்குரிய பிரமாணங்களையும் உங்களுக்குள் எழுதட்டும். அப்பொழுது நீங்கள் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமடைவீர்கள்.

மூன்றாவதாக, அவருடைய விரல்கள் மன்னிக்கும் விரல்கள். பாவியான ஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்லும்படி யூதர்கள் முன் நின்றபோது, இயேசு தன்னுடைய விரலினால் தரையிலே எழுதினார். அந்த எழுத்துக்கள் அந்த ஸ்திரீக்கு மன்னிப்பையும், விடுதலையையும் கொண்டுவந்தன. தேவபிள்ளைகளே, உங்களுக்காக காயப்பட்ட கரங்களிலிருந்து வழியும் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவருடைய மன்னிப்பின் மாட்சிமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (லூக். 11:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.