செப்டம்பர் 15 – இன்று முதல்!
“நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்” (ஆகா. 2:19).
கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய ஆகாய், கர்த்தருடைய வார்த்தையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் கொண்டுவருகிறார். ஆசீர்வாதமற்று, வேதனையோடு, கண்ணீரோடு வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, “இன்றுமுதல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று சொல்லுகிறார். எத்தனை மகிழ்ச்சியான செய்தி!
கர்த்தர் எப்போது ஆசீர்வதிப்பார் தெரியுமா? தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிற நாள்முதல் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். “என்னுடைய ஆலயத்தைக் கட்டுங்கள். அதில் நான் பிரியமாய் இருப்பேன். மட்டுமல்ல, உங்களையும் நான் ஆசீர்வதிப்பேன்” என்கிறார். நீங்கள் ஆலயத்தைக் கட்டத் தீர்மானிக்கிறதையும், ஆலயத்திற்கு கொடுக்கிற மதிப்பையும், கனத்தையும் கர்த்தர் பார்க்கிறார்.
வேதத்தில் சிலர் பலிபீடங்களைக் கட்டினார்கள். மோசே ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டினார். சாலொமோன் மகிமையான தேவாலயத்தைக் கட்டினார். பிற்காலத்தில் எஸ்றா, நெகேமியா, செருபாபேல் போன்றவர்கள் மீண்டும் ஆலயத்தைக் கட்டினார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
இன்றைக்கு நீங்கள் கட்ட வேண்டிய ஆலயம், உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையாய் இருக்கிறது. வானாதி வானங்களை உண்டுபண்ணின ஆண்டவர் கைகளினால் கட்டப்படுகிற ஆலயங்களில் வாசம் பண்ணுகிறதில்லை. நம்முடைய சரீரத்தையே அவர் ஆலயமாக்குகிறார், வாசஸ்தலமாக்குகிறார், ஜெபவீடாக்குகிறார், மகா பரிசுத்த ஸ்தலமாக்குகிறார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார் (கொலோ. 1:27).
எந்த ஒரு மனுஷன், ‘நான் கர்த்தருக்கு ஆலயமாய் விளங்க வேண்டுமே, எனக்குள் வாசம்பண்ணுகிற ஆவியானவருக்கு நான் சிறந்த ஒரு வாசஸ்தலமாய் இருக்கவேண்டுமே’ என்ற எண்ணத்துடன் தன் ஜெபஜீவியத்தையும், வேதவாசிப்பையும் அதிகப்படுத்துகிறானோ, அன்றுமுதல் நிச்சயமாய்க் கர்த்தர் அவனை ஆசீர்வதிப்பார். உலகப்பிரகாரமாக மட்டுமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாகவும், உன்னதத்திற்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதிப்பார்.
ஆகாய் தீர்க்கதரிசியின் காலத்தில் செருபாபேல் வைராக்கியத்தோடு ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்டார். தூக்குநூலை கையில் பிடித்து ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார். கர்த்தர் அதைக் கண்டபோது, அவருடைய உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது. “செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகா. 2:23) என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை முத்திரை மோதிரமாக வைப்பார். ஆகவே உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள். உங்களுடைய சரீரமாகிய ஆலயத்திலே ஆவியானவர் வாசம்பண்ணுகிறார் என்ற எண்ணத்தோடு உங்கள் பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இராஜாக்கள் கைகளிலே முத்திரை மோதிரத்தை அணிந்து அரசாங்க சட்டதிட்டங்களை முத்திரையிடுவதுபோல, இராஜாதி இராஜா உங்களை முத்திரை மோதிரமாகப் பயன்படுத்துவார்.
நினைவிற்கு:- “தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, …. ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்” (எஸ்றா 6:16,22).