Appam, Appam - Tamil

செப்டம்பர் 06 – கால்களை மூடி!

“இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து (ஏசா.6:2).

ஏசாயா, தரிசனத்திலே சேராபீன்களைக் கண்டார். அந்த சேராபீன்கள் இரண்டு செட்டைகளினால் தங்கள் கால்களை மூடிக்கொண்டிருந்தன. எசேக்கியேல் தீர்க்கதரிசி, தரிசனத்திலே நான்கு ஜீவன்களைக் கண்டார். அந்த ஜீவன்கள் தங்களுடைய செட்டைகளால் உடல்களை மூடிக்கொண்டிருந்தன.

நாமும் நம்முடைய கால்களை மறைத்துக்கொள்ளவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். அநேகருடைய கண்கள் போனபோக்கிலே கால்கள் போகின்றன. முடிவிலே பாதாளத்திற்குள் விழுகிறார்கள். உங்கள் கால்கள் தேவசித்தத்தை நிறைவேற்றும்படி மூடப்பட்டு இருக்கவேண்டியது அவசியம்.

உங்கள் வாழ்க்கை மறைவு கட்டப்பட்டு, தேவசித்தத்தைமட்டுமே செய்கிற ஒரு வாழ்க்கையாக இருக்கவேண்டும். கர்த்தர் பேதுருவைப் பார்த்து: “நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரை கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவா. 21:18).

இன்றைக்கு நாகரீகம் என்ற போர்வையில் அநேகர் அருவருக்கும்படி உடுத்திக்கொண்டு திரிகிறார்கள். தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தாமல், மாம்ச இச்சைகளையே வெளிப்படுத்துகிறார்கள். மாம்சத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாய் இருக்கவேமாட்டார்கள்.

வேதம் சொல்லுகிறது “மாம்சசிந்தை மரணம்” (ரோம. 8:6). நீங்கள் உங்கள் மாம்சத்தை வெளிப்படுத்தாமல் கிறிஸ்துவை வெளிப்படுத்துங்கள். “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” (யோவா. 4:24). ஆகையால்தான் அந்த ஜீவன்கள், தங்கள் உடல்களை மூடின. சேராபீன்கள், தங்கள் கால்களை மூடின.

அமெரிக்க தேசத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரன் இருந்தான். அவன் கால்கள் தீவிரமாய் ஓடக்கூடியவை. கால் பந்தாட்டக்காரர்கள் அவனுடைய கால்கள் தங்கள் தேசத்திற்குத் தேவை என்று இழுத்தார்கள். ஆனால் அவனோ தன் கால்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து, செவ்விந்தியர் மத்தியிலே ஊழியம் செய்யச் சென்றுவிட்டான். அவர்களுடைய உள்ளத்தையெல்லாம் கவர்ந்துகொண்டான்.

பல வருடங்களுக்குப் பிறகு, ஒருநாள் அந்த ஊழியர் தனது சொந்த ஊருக்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்தது. அந்த ஜனங்கள் அவருடைய கால்களை விடாமல் பற்றிக்கொண்டார்கள். ‘உங்களுடைய கால்கள் எங்களைத் தேடி வந்து, நற்செய்தி அறிவித்த கால்கள்; புண்ணியமான கால்கள். ஆசீர்வதிக்கப்பட்ட கால்கள்’ என்று சொல்லி அழுதார்கள். தேவபிள்ளைகளே, அப்படியானால், ஊழியம் செய்த ஒரு மனிதரின் கால்களே அந்த அளவுக்குப் பாராட்டப்பட்டன என்றால் கர்த்தருடைய பாதங்கள் எவ்வளவு அற்புதமானவை என்பதை எண்ணிப்பாருங்கள்! சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன!

நினைவிற்கு:- “உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசா. 52:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.