ஆகஸ்டு 26 – ஐந்து மண்டபங்கள்!
“எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு” (யோவான் 5:2).
இன்று உங்களை இஸ்ரவேல் தேசத்திலுள்ள பெதஸ்தா குளத்திற்கு அழைத்துச்செல்ல விரும்புகிறேன். பாருங்கள், இந்தக் குளத்தைச்சுற்றிலும் ஆயிரக்கணக்கான வியாதியஸ்தர்கள் அதன் தண்ணீரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் குளத்தின் பெயர் பெதஸ்தா என்பதாகும். பெதஸ்தா என்றால் இரக்கத்தின் வீடு என்று அர்த்தம். அந்தக் குளம் தேவதூதனால் கலக்கப்படும்போது, முதலாவது இறங்குகிற வியாதியஸ்தன் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட கொடிய வியாதிகொண்டவனாய் இருந்தாலும், அவன் சுகமாகி விடுவான் என்பதே இக்குளத்தின் விசேஷம்.
இக்குளத்தைப் பொறுத்தவரையில் நோயாளியின் வயது வரம்பு முக்கியமில்லை. ஆஸ்துமாவோ, புற்றுநோயோ அல்லது வேறு எந்த உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. குளம் கலக்கப்படும்போது, முதலாவது இறங்கவேண்டும் என்பதே முக்கியம். குளம் எப்பொழுது கலக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அந்தக் குளத்தில் இரக்கம் இருந்தது.
ஆனால் பூரணப்பட்ட இரக்கமல்ல. எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய இரக்கமுமல்ல. அங்கே முப்பத்தெட்டு வருட காலமாய் பரிதாபமாய் ஒரு வியாதியஸ்தன் சுகம் கிடைக்குமா என்று ஏங்கிப்படுத்திருந்தான். ஐந்து மண்டபங்களுள்ள அந்த பெதஸ்தாவும், அந்த வியாதியஸ்தனும் எதற்கு அடையாளம் தெரியுமா? நியாயப்பிரமாணத்தில் ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து ஆகமங்கள் இருப்பதைப்போல பெதஸ்தாவில் ஐந்து மண்டபங்கள் இருந்தன. முப்பத்தெட்டு வருட வியாதியஸ்தனைப்போல இஸ்ரவேலர் இருந்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டது முதல், வனாந்தரத்திலே இஸ்ரவேலர் நடந்தகாலம் முப்பத்தெட்டு வருடங்கள். அவர்களுக்கு இருந்த நியாயப்பிரமாணத்தில் இரக்கம் இருந்தாலும் அது பூரணமானதாய் இருக்கவில்லை.
இப்பொழுது கிருபையின் பிரமாணத்தை இயேசு கொண்டுவந்தார். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். தம்மண்டை வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாதவர். அவரிடத்தில் வருகிற எந்த நோயாளிக்கும் இரக்கம் உண்டு. தெய்வீக சுகமும், ஆரோக்கியமும் உண்டு. அங்கே ஐந்து மண்டபங்கள்போல, கிறிஸ்துவின் காயங்கள் காணப்படுகின்றன. குளத்திலுள்ள தண்ணீரைப்போல காயங்களிலிருந்து வடியும் விலையேறப்பெற்ற இரத்தம் இருக்கிறது.
இந்தப் பெதஸ்தா குளத்திற்குப் போகும் வழியைப்பற்றி ஒருவர் எழுதும்போது, “அதற்குப் போகும் வழி விசுவாசம்தான். அந்தப் பாதையிலே நடந்து, கிறிஸ்தவ மார்க்கம் என்னும் ஊரிலே சேர்ந்து, கிறிஸ்து என்னும் குளத்தண்டை போய், அவருடைய ஐந்து காயம் என்னும் மண்டபத்திற்குள்ளே அடைக்கலம் புகுந்து, அவருடைய இரத்தத்தில் மூழ்கும்போது உன் ஆத்தும வியாதிகள் அதே நிமிஷம் தொலைகிறது பார்” என்று குறிப்பிட்டார்.
தேவபிள்ளைகளே, இன்றைக்கும் இயேசுகிறிஸ்து இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் உங்கள் நோய்களையும், வியாதிகளையும், பெலவீனங்களையும் குணமாக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்.
நினைவிற்கு:- “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்” (யோவா. 5:8,9).