ஆகஸ்டு 23 – தீமையினின்று இரட்சியும்!
“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (மத்.6:13).
‘தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்’ என்று தமிழில் அர்த்தம் தரும் இந்த வசனம் ஆங்கிலத்தில் ‘தீயவனிடத்திலிருந்து என்னை இரட்சித்துகொள்ளும்’ என்று அர்த்தம் தரும்வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொல்லாங்கனாகிய சாத்தானுடைய கைகளில் விழாதபடி என்னைக் காத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கவேண்டியர்களாக நாம் உள்ளோம்.
சாத்தானுடைய பெயர்களில் ஒன்று சோதனைக்காரன் என்பதாகும். அவன் நோக்கமே தேவஜனங்களை சோதனையில் விழவைத்து பாவச்சுமையை சுமத்தி, ஆவிக்குரிய ஜீவியத்தை நஷ்டப்படுத்துவதாகும். சில சோதனைகள் குடும்ப சமாதானத்தை அழித்துவிடக்கூடும். சில சோதனைகள் தற்கொலைக்கு வழிநடத்தும். சில சோதனைகள் ஆவிக்குரிய ஜீவியத்தை நஷ்டப்படுத்தி, களங்கம் கற்பித்துவிடும். எனவேதான் தேவனை நோக்கி “அப்பா, என்னை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்” என்று ஜெபிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.
சோதனை வரும்போது அநேகர் கலங்கிவிடுகிறார்கள். சிலர் பாவ சோதனைகளை கடவுள்தான் கொண்டுவருகிறார் என்று தவறாக எண்ணுகிறார்கள். வேதம் சொல்லுகிறது, “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக். 1:13,15).
தேவன் ஒருவனையும் சோதிக்கிறவரல்ல என்று வேதம் சொல்லும் அதேநேரத்தில் கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தார் (ஆதி. 22:1) என்றும் வேதம் சொல்லுவதால் ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளதே என்று சிலர் கேட்கலாம். தமிழ்மொழியில் பல அர்த்தங்கள் தொனிக்கும்வகையில் பரீட்சை, சோதனை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதே இதன் காரணமாகும். ஆங்கிலத்தில் (1) Test (2) Trial (3) Temptation என தனித்தனி வார்த்தைகள் தனித்தனி அர்த்தங்களைத் தரும்வகையில் அமைந்துள்ளன.
மேல் வகுப்புக்கு ஒரு மாணவன் செல்வதற்கு தகுதியுள்ளவனா என்பதை அறிந்துகொள்ளுவதற்காகவே பள்ளிக்கூடங்களில் பரீட்சை (Test) வைப்பார்கள். ஆனால் கர்த்தர் உங்களை சோதிப்பதெல்லாம், எந்த முகாந்தரத்தை வைத்து உங்களை உயர்த்துவது, மேன்மைப்படுத்துவது, அதிகமான பொறுப்புகளைத் தருவது ஆகியவற்றைப் பற்றியதாகும்.
ஆனால் பரீட்சையையும் சோதனையையும் ஒரு மனிதனைக் கீழே தள்ளி, பேரைக் கெடுத்து, அவனை அழிப்பதற்காகவே சாத்தான் கொண்டுவருகிறான். அவன் சோதனைக்காரனாக மட்டுமல்லாமல், திருடனாகவும், மனுஷ கொலைபாதகனாகவும் இருக்கிறான். அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
தேவபிள்ளையே, அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துகிறார் (உபா. 8:3).
நினைவிற்கு:- “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி.10:13).