Appam, Appam - Tamil

ஆகஸ்டு 17 – ஒரே ஒரு வாழ்க்கை!

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு (பிர. 3:1,2).

இந்த பூமியிலே ஒரே ஒரு வாழ்க்கை மனுஷனுக்குக் கிருபையாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வாழ்நாள் மிகக் குறுகியது. கிருபையின் தருணங்களும் குறுகியதே. அநித்தியமான இந்த உலகத்திலே நாம் வேகமாய் கடந்து செல்லுகிறோம். நாம் இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறோம்.

பிறப்பு, வாழ்க்கை, மரணம், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கை ஆகிய நான்கு முக்கியமான சம்பவங்களை இந்த உலகத்திலே பிறக்கிற ஒவ்வொரு மனிதனும் சந்தித்தேயாகவேண்டும். “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபி. 9:27) என்று வேதம் சொல்லுகிறது.

கர்த்தர் ஒரு நோக்கத்தோடுதான் உங்களை இந்த பூமியிலே பிறக்கச்செய்திருக்கிறாரே தவிர உலகத்தை நிரப்புவதற்காகவோ, ஏனோதானோ என்று வாழ்வதற்காகவோ அல்ல. உங்களைக்குறித்த திட்டமும், தெளிவுமான நோக்கம் அவருக்கு உண்டு. உங்களைத் தாயின் கர்ப்பத்திலே உருவாக்கினவருக்கு, அதற்கு முன்னமே உங்களைக்குறித்த ஒரு பிரமாணம் உண்டு. நீங்கள் தற்செயலாய் இந்த உலகத்தில் வந்துவிடவில்லை.

கர்த்தர் சொல்லுகிறார்: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே. 1:5).

உங்களுடைய வாழ்க்கையைக்குறித்து கர்த்தரிடத்திலே கேளுங்கள். எரேமியாவை தாயின் வயிற்றிலே தெரிந்துகொண்டவரே, தீர்க்கதரிசியாய்ப் பயன்படுத்தினவரே என்னைக்குறித்து உம்முடைய சித்தம் என்ன என்று கேளுங்கள். அப். பவுலும்கூட கர்த்தரிடத்திலே அப்படித்தான் கேட்டார்.

“ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” என்று அவர் கேட்டார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்” (அப். 9:6) சொன்னபடியே கர்த்தர் அங்கே தமது சித்தத்தை வெளிப்படுத்தினார். “அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப். 9:15) என்று சொன்னார்.

சிலர், “நான் ஏன்தான் பிறந்தேனோ தெரியவில்லை. நான் ஏன் இந்த உலகத்தில் வாழவேண்டும்? தற்கொலை செய்து கொள்வதேமேல்” என்றெல்லாம் எண்ணுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளின் வாயில் அப்படிப்பட்ட தோல்வியின் வார்த்தைகள் ஒருநாளும் வரவே கூடாது. அதுபோல, சில பெற்றோர்களும் கீழ்ப்படியாத தன் பிள்ளைகளை, “நீ ஏன்தான் எனக்குப் பிறந்தாயோ தெரியவில்லை. உன்னால் எனக்கு எவ்வளவு தொல்லை! நீ செத்துத் தொலைந்தால் நலமாயிருக்குமே” என்று புலம்புகிறார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஒருநாளும் வேதனையிலே இப்படியெல்லாம் பேசிவிடாதிருங்கள். உங்கள் பிள்ளைகளைக் கர்த்தருடைய கையிலே ஒப்புவியுங்கள். அப்பொழுது ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவார்.

நினைவிற்கு:- “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங். 31:14,15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6