Appam, Appam - Tamil

அக்டோபர் 18 – வேதபாரகர் பரிசேயரிலும் அதிக நீதி!

“வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 5:20).

மலைப்பிரசங்கத்திலே நான்குமுறை கர்த்தர், நீதியைக்குறித்துப் பேசியிருக்கிறார். தேவபிள்ளைகளுடைய நீதியானது, வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் மேலானதாய் இருக்கவேண்டும்

பரிசேயர் நீதி என்று ஒன்று இருந்தது. அது வாரத்திலே இரண்டுமுறை உபவாசிக்கும் நீதியாகும். தனக்கு உண்டான எல்லாவற்றிலேயும் தசமபாகம் கொடுக்கும் நீதி. அந்த நீதிகளை விவரித்து பரிசேயன் ஜெபம்பண்ணினபோது, “தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்” (லூக். 18:11,12).

உங்களுடைய நீதி பரிசேயர் மற்றும் சதுசேயர் ஆகியோர் நீதியிலும் அதிகமாய் இருக்கவேண்டும். அவர்களே வாரம் இரண்டுதரம் உபவாசிக்கும்போது, நீங்கள் உபவாசிக்காமல் இருக்கலாமா? அவர்களே தசமபாகம் கொடுக்கும்போது நீங்கள் கொடுக்காமல் இருக்கலாமா?

நம் தேசத்தில் உண்மையும், உத்தமமுமாய் வாழ நினைக்கிற பல சன்மார்க்கர்கள் இருக்கிறார்கள். இறைவனுடைய பாதங்களை எப்படியும் அடைந்துவிடவேண்டுமென்று இருக்கிற ரிஷிகள், முனிவர்கள், துறவிகள், சாதுக்கள், சன்னியாசிகள் ஆகியோர் இருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை அவர்களைவிட மேம்பட்ட வாழ்க்கையாக இருக்கவேண்டும் அல்லவா? நீதியுள்ள வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்.

ஒரு கிறிஸ்தவர் தான் லஞ்சம் வாங்குவதில்லை என்று பெருமையாகப் பேசிக்கொண்டார். அதைக் கேட்ட ஒரு பிராமண சகோதரி, “நானும்கூட லஞ்சம் வாங்குவதில்லை. புத்தாண்டு நேரத்திலே அலுவலகம் தொடர்பான ஒரு ஒப்பந்ததாரர் வந்து புது டைரியை எல்லோருக்கும் வினியோகித்தார். அதுவும்கூட ஒருவகையிலே லஞ்சம்தான் என்று நான் எண்ணி அதை வாங்கவில்லை. ஆனால் நீங்கள் வாங்கினதை நான் கண்டேன். எங்கே உங்கள் நீதி?” என்று கேட்டாள். அவளுக்கு பதில் சொல்ல அவரால் முடியவில்லை.

ஒரு ஊழியக்காரர் சொன்னார், “நான் விடியற்காலம் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கான அழைப்புக் கொடுக்கிறதைக் கேட்டேன். அது என்னுடைய உள்ளத்தில் ஆழமாய் உணர்த்தியதால் இப்பொழுது அவர்கள் தொழுவதற்கு முன்பாகவே எழுந்து ஜெபிக்கிறேன். என் நீதி அதிகமாய் இருக்கவேண்டுமென்றே முயற்சிக்கிறேன்” என்றார்.

இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகிற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். தாவீது அவர்களுடைய நீதியிலும் தன்னுடைய நீதி அதிகமாய் இருக்கவேண்டுமென்பதற்காக “பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்” (சங். 119:163,164) என்றார்.

நினைவிற்கு:- “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன். ” (யோபு 27:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.