Appam, Appam - Tamil

அக்டோபர் 07 – பாருங்கள்! பாருங்கள்!

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்” (மத். 6:26).

பாருங்கள், பாருங்கள், கவனித்துப்பாருங்கள் என்று கர்த்தர் அன்போடு அழைக்கிறார். சாதாரணமாக பார்ப்பதற்கும், கவனித்துப்பார்ப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் உண்டு. மேலோட்டமாக பார்க்கும்போது, அநேக நுணுக்கங்களை, இரகசியங்களை நாம் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆனால் கவனித்து, உன்னித்துப்பார்க்கும்போது, பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

முதலாவது ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப்பாருங்கள் (மத். 6:26) என்றும், இரண்டாவது காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறது என்று கவனித்துப்பாருங்கள் (மத். 6:28) என்றும், மூன்றாவது கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள் (எபி. 3:1) என்றும் ஆண்டவர் மூன்று காரியங்களை முக்கியமாக கவனித்துப்பார்க்கும்படி சொல்லுகிறார்.

நான்கு மாதங்களாய் வீட்டு வாடகை கொடுக்கவில்லையே என்ன செய்வது என்று கலங்கியவண்ணம் ஒரு விசுவாசி சென்றுகொண்டிருந்தார். வழியிலே ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு காகம் இறந்து கிடக்கிறதையும், மற்ற காகங்கள் சுற்றி நின்று கரைகிறதையும் கண்டார். அந்த காக்கையை கவனித்துப்பார்த்தபோது, அதனுடைய வாய் திறந்திருக்கக் கண்டார். அப்பொழுது அந்த காக்கையின் வாய்க்குள்ளே ஒரு தங்க மோதிரம் சிக்கிக்கொண்டிருந்ததையும் கண்டார். அதை எடுத்து விற்று, அந்தப் பணத்தின்மூலமாக வாடகை நிலுவையைச் செலுத்திவிட்டு சமாதானத்துடன் வாழ்ந்துவந்தார்.

காக்கை இனம் இன்றும் நம்மைச் சுற்றிப்பறந்து எலியாவின் தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறவராக இருக்கிறார் என்று நமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. காகம் மாறவில்லை. நாம்தான் காகங்களை கவனித்துப்பார்க்கத் தவறிவிட்டோம். எலியாவை போஷிக்க காகத்தைப் பயன்படுத்திய கர்த்தர் இன்றைக்கும் மாறாதவராய் இருக்கிறார். “காகங்களைக் கவனித்துப்பாருங்கள், …. அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (லூக். 12:24).

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட இடத்தின் வழியாக ஒரு பக்தன் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே கருகி செத்துப்போயிருந்த ஒரு கோழியையும், அதன் செட்டைகளுக்குள்ளே உயிருள்ள அநேக கோழிக் குஞ்சுகளையும் கண்டார். அந்த காட்டில் தீ பற்றி எரிந்தபோது, இந்த கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பதற்காக தன் சிறகுகளால் மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டது. அது தப்பித்துக்கொள்ள எண்ணியிருந்தால் ஓடியோ, பறந்தோ தப்பியிருக்க முடியும். ஆனால் குஞ்சுகள்மேல் வைத்த பாசம் காரணமாகத் தன் உயிரையே தியாகம் செய்து குஞ்சுகளை காத்துக்கொண்டது.

இயேசு எருசலேமைப் பார்த்து, “எருசலேமே, எருசலேமே, …. கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்” என்று சொல்லி கண்ணீர் சிந்தினார் (மத். 23:37).

தேவ பிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பாதுகாக்க எவ்வளவாய் தம்முடைய செட்டைகளை விரித்திருக்கிறார்! எவ்வளவாய் அன்பு செலுத்தி மனதுருகுகிறார்! உன்னதமானவரின் மறைவுக்கும், சர்வ வல்லவரின் நிழலுக்கும் வந்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.