Appam, Appam - Tamil

நவம்பர் 23 – ஆயுசை பெருகப்பண்ணும்!

“கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” (நீதி.10:27).

இன்று புத்தகக் கடைக்குச் சென்றால் பற்பல புதுமையான தலைப்புகளுடன் நூல்களைக் காணமுடிகிறது. இது எழுத்துக்களின் காலங்கள். மனித அறிவை வெளிப்படுத்துகிற காலங்கள். அநேகப் புத்தகங்கள் மனிதனுடைய முன்னேற்றத்திற்காக எழுதப்படும் புத்தகங்களாயுள்ளன. நண்பர்களை சம்பாதிப்பது எப்படி, நோயில்லாமல் வாழ்வது எப்படி, முதுமையிலும் இளமையாக காட்சியளிப்பது எப்படி போன்ற விபரங்களைத் தெரிவிக்கும்வகையில் நூல்கள் வெளிவருகின்றன.

புத்தக நிலையத்திலிருந்த ஒரு புத்தகம் என் கண்களைக் கவர்ந்தது. அதன் தலைப்பு “நூறு ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி?” ஆகும். அதை ஆச்சரியத்துடன் வாங்கினேன். இதை எழுதின ஆசிரியர் உயிரோடு இருக்கிறாரா என்று அந்தப் புத்தக நிலையத்தாரிடம் கேட்டேன். அதற்கு “இல்லை, அவர் மரித்துவிட்டார். அறுபது வயதைக்கூட அவர் எட்டிப்பார்க்கவில்லை” என்று பதிலளித்தார். அறுபது வயதை தாண்டாதவர் நூறு வயது உயிர் வாழ்வது எப்படி என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார் என்றால் அவரது எழுத்துக்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கிராமப்புறங்களில், “மொட்டைத் தலையன் முடி வளரும் தைலத்தை விற்றுச் சென்றானாம்” என்பார்கள். வேதம் இவர்களை “காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்” என்று வர்ணிக்கிறது.

உண்மையாகவே ஒரு மனிதனுடைய ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் வழியை வேதம் திட்டமும் தெளிவுமாக அறிவிக்கிறது. அது என்ன வழி? “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” (நீதி. 10:27). “ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு” (சங். 68:20).

அந்த வழிமுறைகளை அறிந்திருந்த ஏனோக்கு என்ற பக்தன் மரணத்தைக் காணாமலேயே எடுத்துக்கொள்ளப்பட்டார். அவருக்குப் பூமியிலே கல்லறையே கிடையாது. ‘மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே?’ என்று வெற்றி முழக்கம் செய்து மரணத்திற்கு நீங்கலாகி ஜீவனுக்குள் பிரவேசித்த அற்புத மனிதராக விளங்குகிறார். நமது தேசத்தில் பல யோகிகளும், முனிவர்களும் மரணத்திற்கு நீங்கலாகும் வழிகள் தங்களுக்கு தெரிகிறதாக பொய்யாகக் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சிலர் தங்களுடைய சரீரத்திலிருந்து உயிரானது விடுபட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் சரீரத்திற்குள்ளே பிரவேசிக்குமென்று சவால் விட்டார்கள். ஆனால் சரீரத்தில் இருந்து பிரிந்த ஜீவன் மறுபடியும் சரீரத்திற்குள் பிரவேசிக்கவே இல்லை.

அப்படிப்பட்ட யோகிகளின் சரீரங்களை அவர்களுடைய சீடர்கள் பல மாதங்கள் நம்பிக்கையுடன் வைத்துப்பார்த்துவிட்டுப் பின்னர் அழுகி நாறுகிற பிணத்தை அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் ஏனோக்கு சரீர மரணத்தையும், ஆத்தும மரணத்தையும், நித்திய மரணத்தையும் வென்று காண்பித்தார்.

தேவபிள்ளைகளே, இந்தப் பூமியிலே உங்களுடைய வாழ்நாள் நீடித்திருப்பதற்கு கர்த்தருக்குப் பயப்படுங்கள். மட்டுமல்ல, உங்களுடைய தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுங்கள். பாவங்களை அகற்றி கர்த்தருக்குப் பிரியமாக நடந்துகொள்ளுங்கள். ஊக்கமான ஜெபம் ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணும். எசேக்கியா இராஜா அப்படி ஜெபித்ததினிமித்தம் அவருடைய ஆயுளில் பதினைந்து வருடங்களைக் கர்த்தர் கூட்டிக் கொடுக்கவில்லையா?

நினைவிற்கு:- “நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (சங். 91:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.