Appam, Appam - Tamil

ஜூலை 29 – உலாவுகிற கர்த்தர்!

“பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள் (ஆதி. 3:8).

கர்த்தர் உலாவுகிறவர். தேவனுடைய பிள்ளைகளின் வீடுகளுக்கும், ஆராதனை ஸ்தலங்களுக்கும், இறங்கி வந்து உலாவுகிறவர். இரண்டுபேர் அல்லது மூன்றுபேர் அவருடைய நாமத்தில் கூடி வந்துவிட்டால் போதும், கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இறங்கி வந்துவிடும். கர்த்தர் அவர்கள் நடுவில் வந்து உலாவ ஆரம்பித்துவிடுகிறார்.

‘என்னுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிற எந்த ஸ்தானத்திலும் நான் வருவேன், உலாவுவேன், உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். வானத்தையும் பூமியையும் உருவாக்கின மகாபெரிய ஆண்டவர் மனுஷரின் மத்தியிலே வாசம்பண்ணி அவர்களுக்கு நன்மை செய்யும்படி உலாவிவருவது எத்தனை அற்புதமான ஒரு காரியம்!

சிங்கக்கெபியிலே உலாவ கர்த்தர் வருவாரா? நிச்சயமாகவே வருவார். தானியேலுக்கு உதவி செய்யும்படி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட அவர் இறங்கி வந்தார். அக்கினிச்சூளையில் போடப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோடுகூட விடுதலை நாயகனாக உலாவினார். இயேசு என்ற பெயரில் பூமிக்கு வந்தபோது சாலொமோன் மண்டபத்தில் அவர் உலாவிக்கொண்டிருந்தார் (யோவா. 10:23).

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சைக் கட்டிக்கொண்டு, பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருந்தார் (வெளி. 1:13). இந்த குத்துவிளக்குகள் சபையை வெளிப்படுத்துகிறவையாய் இருந்தபோதிலும் மறுபக்கத்தில் ஆண்டவருக்காக எழும்பிப் பிரகாசிக்க ஒப்புக்கொடுத்தவர்களையே காண்பிக்கிறது. “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).

குத்துவிளக்குகளின் மத்தியில் யார் உலாவ முடியும்? ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த குத்து விளக்குகளின் மத்தியிலே ஆசாரியர்கள் மட்டுமே உலாவ முடியும். இயேசு எப்பொழுது உயிரோடு எழுந்தாரோ அன்றே அவர் பிரதான ஆசாரியர் என்ற நாமம் தரிப்பிக்கப்பட்டார் (எபி. 5:10). உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து நம்முடைய மத்தியிலே பிரதான ஆசாரியராக நம்மை பிரகாசிக்கச்செய்ய வல்லமையுள்ளவராய் உலாவிக்கொண்டேயிருக்கிறார்.

குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவுகிற இயேசு என்ன செய்கிறார்? நம்மை பிரகாசிக்கச் செய்கிறார். உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. பிரகாசிக்கச்செய்யும்படி அபிஷேக எண்ணெயை ஊற்றிக்கொண்டிருக்கிறார். மங்கி எரிகிற திரியை பிரகாசிக்கச்செய்கிறார். ஆவியின் வரங்களை அனல்மூட்டி எழுப்புகிறார்.

குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவுகிற இயேசு இன்னும் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள். அவர் கரும்திரியை வெட்டுகிறார். யார் யாருக்குள் சுயம், பெருமை, மேட்டிமை, அகங்காரம் ஆகிய கரும்திரி காணப்படுகிறதோ அவைகளையெல்லாம் வெட்டிச் சீர்ப்படுத்துகிறார். தேவபிள்ளைகளே, இருண்டு கிடக்கிற இந்த உலகத்திலே கர்த்தருடைய ஒளியைக் கொண்டுவரும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா?

நினைவிற்கு:- “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவா. 1:5).

Comments (2)

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

John Wiselin

July 29, 2026

Please send the Antantulla Appam Tamil book

Reply

elim admin

August 11, 2026

Praised the Lord,

Thanks for contacting, please send your request and full address to whatsapp number 9003067777.
One year Subscription amount Rs. 250, Please pay to this number Antantulla Appam – Gpay – 9840695296, mention with “For Antantulla Appam Subcription” and send the screenshot to 9003067777 WhatsApp number with full address.

Thanks
God Bless you.

Reply