ஜூலை 25 – தைரியம் பெருகுவதற்காக!
“நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (சங். 118:5).
ஜெபம் உங்களுடைய நெருக்கங்களையும் போராட்டங்களையும் நீக்குகிறது. விசாலமான இடத்தில், உன்னத ஸ்தானத்தில் அமரும்படிச் செய்கிறது. ஜெபிக்கிறவர்கள் மென்மேலும் உயர்த்தப்படுவார்கள். “நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1) என்று வேதம் சொல்லுகிறது.
நம் ஆண்டவர் கோழை அல்ல. தைரியத்தின் ஆண்டவர். அவர் ஜெபிக்கிற தம்முடைய பிள்ளைகளைத் தைரியப்படுத்தித் திடப்படுத்துகிறார். யோசுவாவை மோசேயின்மூலமாகத் திடப்படுத்தினார். தானியேல், எலியாவை தேவதூதர்களின்மூலமாகத் திடப்படுத்தினார். சீஷர்களைத் தம் காயப்பட்ட கரத்தின்மூலமாகத் திடப்படுத்திப் பெலப்படுத்தினார்.
சாத்தான் விசுவாசிகளை பாவம் செய்யத் தூண்டுகிறான். பாவம், ஆவிக்குரிய தைரியத்தை இழக்கச்செய்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ, விசுவாசிகளை ஜெபம் செய்ய ஏவி எழுப்புகிறார். ஜெபம் மகா தைரியத்தையும், உன்னத பெலத்தையும், கர்த்தருக்காக வைராக்கியத்தையும் கொண்டுவரும். வெற்றிமேல் வெற்றிபெறும்படிச் செய்யும்.
பவுல் தேவனை ஸ்தோத்திரித்துத், தைரியமடைந்தார் (அப். 28:15) என்று வேதம் சொல்லுகிறது. ஜெபித்து ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்த பவுல் மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல் தேவ இராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார்.
எருசலேமில் மேல்வீட்டறையில் பத்து நாளளவும் உபவாசித்து ஜெபித்துவந்த பேதுருவும், சீஷர்களும் கர்த்தருக்காக வைராக்கியம்கொண்டார்கள். யூதருக்கும் பரிசேயருக்கும் பயப்படவில்லை. தைரியமாக நின்று கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள். வேதம் சொல்லுகிறது: “பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்” (அப். 4:13).
நீங்கள் ஊக்கமாக ஜெபிப்பீர்களா? அப்பொழுது நீங்கள் மனுஷருக்குப் பயப்படுவதில்லை. காவல் நிலையம் என்றும், நீதிமன்றம் என்றும் அலைந்து கை கட்டி நிற்பதில்லை. உங்கள் மனசாட்சியும் தெளிவாய் இருக்கும். உங்கள் வார்த்தைகளைக் கர்த்தர் கனம்பண்ணுவார். ஒருவனும் எதிர்த்து நிற்கக்கூடாத வாக்கினாலும் வல்லமையினாலும் கர்த்தர் உங்களை நிரப்புவார்.
பொதுவான ஜெபத்திலே “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்” (மத். 6:13) என்று ஜெபிக்கும்படி ஆண்டவர் போதித்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் எல்லாத் தீமைக்கும் உங்களை விலக்கிக் காத்துக்கொள்வார். எல்லா வன்கண்கள், பொறாமைக் கண்கள், தீயக்கண்களிலிருந்து முற்றிலுமாய் விலக்கி உங்களைப் பாதுகாப்பார்.
நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6).