ஜூலை 24 – மனித சூழ்ச்சிகள், தீவினைகள்!
“கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசா. 25:4).
உங்களுக்கு விரோதமாக பல தீய மனிதர்கள் எழும்பக்கூடும். உங்கள் அலுவலகத்திலே போராட்டமான சூழ்நிலைகளும், பிரச்சனைகளும் சூழ்ந்துகொள்ளக்கூடும். அந்த நேரங்களிலே மனிதருடைய பொல்லாத ஆவிகளின்மேல் நீங்கள் ஜெயம் எடுக்கும்படி உங்களுக்கு ஜெபம் அவசியம்.
கர்த்தரை நோக்கி மன்றாடுகிற மன்றாட்டு, பதட்டமான சூழ்நிலையை சமாதானமானதாக மாற்றக்கூடியது. கொந்தளிக்கும் கடலை அமரச் செய்யக்கூடியது. வீசும் புயல் காற்றை ஓயச்செய்யக்கூடியது. ஜெபத்தின் பெரிய இரகசியம் கர்த்தர் நமக்கு ஜனங்களை கீழ்ப்படுத்துவதாகும். தாவீது சொன்னார், “ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்” (சங். 47:3).
ஜனங்களைக் கர்த்தர் நமக்குக் கீழ்ப்படுத்தாவிட்டால் கலவரங்களும், குழப்பங்களும் நேரிட்டுக்கொண்டுதான் இருக்கும். ஜெபத்தின்மூலம் மனித ஆவியின்மேல் ஜெயங்கொள்ளுங்கள். மனிதனுடைய பொல்லாத குணாதிசயங்கள், சுபாவங்கள்மேல் வெற்றிகொள்ளுங்கள். மனுஷருடைய கோபங்கள், எரிச்சல்கள், இச்சைகள், காமவிகாரங்கள் உங்களைத் தொடாதபடிக்கு ஜெபியுங்கள்.
சாலொமோன் சிறு வயதிலேயே இராஜாவானார். அனுபவம் இல்லாத இளம் வயது அது. அப்பொழுது இஸ்ரவேல் தேசத்திலே அனுபவமுள்ள பலசாலிகளும், பல சேனாதிபதிகளும் இருந்தார்கள். முதிர்வயதுடைய மந்திரிகள் இருந்தார்கள். ஆனால் சாலொமோன் கர்த்தரை நோக்கி ஊக்கமாய் ஜெபம்பண்ணினபோது, கர்த்தர் எல்லா ஜனங்களையும் சாலொமோனுக்குக் கீழ்ப்படுத்தினார்.
வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமு. 2:8).
தானியேலுடைய வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். அவர் அடிமையாய் பாபிலோனுக்குச் சென்றார். பாபிலோன் அரண்மனையிலே பாபிலோனிய ஞானம் அவருக்குள் புகுத்தப்பட்டது. அது சாத்தானின் ஞானம். அவர் தேவனை நோக்கி ஜெபித்தபோது தேவன் பாபிலோனிலுள்ள சகல ஞானிகளைப்பார்க்கிலும் பத்து மடங்கு சமர்த்தனாயிருக்கக் கட்டளையிட்டார்.
பாபிலோனிய இராஜா கொடூரமான கோபக்காரனாய் இருந்தபோதிலும் தானியேல் தன் சிநேகிதர்களோடு சேர்ந்து இரவிலே ஜெபித்தபோது, கர்த்தர் இராஜாவின் சொப்பனத்தையும், அதற்கான அர்த்தத்தையும் வெளிப்படுத்தினார். இராஜாவின் கோபம் தணிந்து, அனுகூலம் கிடைத்தது.
மனிதர்கள்மேலும், மிருகங்கள்மேலும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊக்கமாய் ஜெபியுங்கள். ஜெபம் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், சூழ்நிலைகளையும் மாற்றும். ஜெபம் தேவபிரசன்னத்தையும், தேவமகிமையையும் உங்களுக்குள் கொண்டுவரும்.
நினைவிற்கு:- “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது” (சங். 91:7).