ஜூலை 22 – ஒரு விருந்து!
“நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும், கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்” (மத். 22:4).
கர்த்தர் தம்முடைய ஜனத்துக்காக ஆயத்தம்பண்ணுகிற அநேகக் காரியங்களை ஒவ்வொன்றாக தியானித்துவருகிறோம். அப்படி ஆயத்தம்பண்ணுகிறதிலே ஒன்று விருந்து ஆகும். கர்த்தர் உங்களுக்கும், எனக்கும் மத்திய ஆகாயத்திலே ஒரு பரலோக விருந்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
“நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான்” (வெளி. 19:7,9).
வேதம் சொல்லுகிறது, “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” (ஏசா. 25:6).
நாம் ஆத்தும மணவாளனாகிய கிறிஸ்துவோடு, அவருடைய சொந்த மணவாட்டியாக அவரோடுகூட அமர்ந்திருப்போம். கர்த்தர் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக முடிசூட்டப்பட்டிருப்பார்! அங்கே “நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது” (உன். 3:10). ஆடலும், பாடலும், துதியும் மகிழ்ச்சியின் ஆரவாரமும் வார்த்தையால் விவரிக்கவே முடியாத அளவுக்கு அத்தனை அருமையாய் இருக்கும்.
வேதம் சொல்லுகிறது, “விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்” (பிர. 10:19). பூமியிலே பாடு அனுபவித்த பரிசுத்தவான்கள், கண்ணீரோடு சுவிசேஷ விதைகளை விதைத்த தேவ ஊழியர்களின் சந்தோஷத்திற்காகவே கர்த்தர் இந்த விருந்தை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
ஆம், இனி அவர்களுக்குப் பாடுகளும், துயரங்களும் இல்லை. கர்த்தர் ஆயத்தம்பண்ணுகிற விருந்திலே அவரோடுகூட பந்தியிருக்கும்போது கவலைகள் எல்லாம் பறந்துபோகும். “என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு போனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே” (உன். 2:4).
உலகத்தார் களியாட்டுக்கும், குடிவெறிக்கும், கொண்டாடுதலுக்கும் பலவிதமான விருந்துகளை ஆயத்தம் செய்வார்கள். ஆனால், கர்த்தர் ஆயத்தம்பண்ணுகிற விருந்தில் பரிசுத்தவான்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். எந்த பாவியும் அங்கே வரமுடியாது.
தேவபிள்ளைகளே, நீங்கள் அந்த மகிமையான விருந்திலே கலந்துகொள்ள உங்களை எவ்வளவாய் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்! இரட்சிப்பின் உடை உடுத்தி, நீதியின் சால்வையைத் தரித்து, பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு மன மகிழ்ச்சியாய் களிகூருவதற்கு எவ்வளவாய் உங்களைத் தகுதிப்படுத்த வேண்டும்! அந்த நாள் நெருங்கிவிட்டது.
நினைவிற்கு:- “மனரம்மியமோ நித்திய விருந்து. பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது” (நீதி. 15:15,17).