Appam, Appam - Tamil

ஜூலை 03 – வானத்து சத்தம்!

“வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று …என்று விளம்பினது (தானி. 4:31,32).

நேபுகாத்நேச்சாருக்கு தன்னுடைய இராஜ்யத்தைக்குறித்தும், தன்னுடைய ஆட்சியைக்குறித்தும் மிகுந்த பெருமையிருந்தது. வானமும், பூமியும் கர்த்தருடையது என்பதை மறந்தார். இந்த பூமியிலே வாழவும், அரசாளவும், கர்த்தர் தனக்கு கிருபையாய் ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார் என்பதையும் மறந்தார்.

ஒருநாள் இராஜா பாபிலோன் இராஜ்யத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?” (தானி. 4:30) என்று சொன்னார்.

எத்தனையோபேர் வானத்திலிருந்து அன்பான, மனதுருக்கமான சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் எச்சரிப்பின் சத்தத்தையும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வானத்திலிருந்து வந்த சத்தமானது, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் சத்தமாகும். “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது” (தானி. 4:31,32). ஆறறிவுள்ள மனிதன், பெருமையினால் ஐந்தறிவுள்ள மிருகமானான்.

தேவபிள்ளைகளே, ஒருபோதும் பெருமைக்கு இடங்கொடாதிருங்கள். பெருமை சாத்தானிடத்திலிருந்து வருகிற ஒரு தீய சுபாவம் என்பதால் நீங்கள் அதை எதிர்த்து நிற்கவேண்டும். இல்லையெனில் கர்த்தர் உங்களுக்கு விரோதமாய் மாறுவார். உங்களையும் கீழே தள்ளப்படவேண்டியதிருக்கும்.

பாருங்கள்! பரலோகத்திலே மாபெரும் தேவதூதனாகவும், அபிஷேகம்பண்ணப்பட்ட கேருபாகவும், அக்கினியின் கற்களின் நடுவிலே உலாவி பூரண அழகானவனாகவும் பூரண ஞானத்தால் நிறைந்தவனாகவும் இருந்த லூசிபர், பெருமையடைந்தபோது, வானத்திலிருந்து தள்ளப்பட்டான். பாதாளத்தில் விழுந்து பிசாசானான். பெருமை பெரிய வீழ்ச்சியைக் கொண்டுவருகிறது. அவன் எவ்வளவு பெரிய தேவதூதனானாலும், அவனைப் பிசாசாக்கிவிடுகிறது. பெருமைகொண்ட நேபுகாத்நேச்சாரை மிருகமாக்கிவிட்டது. அவன் பைத்தியக்காரனானான்.

ஏழு ஆண்டுகள் சென்றபிறகுதான் நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தான். வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தருக்கு நேராக தன் இருதயத்தைத் திருப்பினான். முன்புபோல பாபிலோன் ராஜ்யத்தையும், அதன் மகிமை பிரதாபத்தையும் நோக்கிக்கொண்டிருக்கவில்லை. உன்னதமானவருக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்தபோது, அவருக்குப் புத்தி திரும்பவந்தது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய கண்கள் எப்போதும் பரலோகத்தை நோக்கிப்பார்க்கட்டும். இன்று பரலோக தேவனைப்பற்றிப் புகழ்ந்து, ஆராதிப்பதற்கு கொஞ்ச நேரத்தையாவது ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்” (தானி. 4:37).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.