ஜனவரி 12 – இழந்துபோன மகன்
“இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே” (லூக். 15:32).
இழந்துபோனதைத் தேடுகிறவர் இயேசு என்பதை விளக்கும் மூன்று உவமைகளை லூக்கா 15 – ம் அதிகாரத்தில் நாம் காணலாம். முதலாவது காணாமல்போன ஆட்டைக்குறித்து வாசிக்கிறோம். பின்பு காணாமல்போன வெள்ளிக்காசைக்குறித்து வாசிக்கிறோம். கடைசியாக காணாமல்போன மகனைக்குறித்து வாசிக்கிறோம். இந்த மூன்று உவமைகளுமே இழந்துபோன மனுக்குலத்தை பாசத்தோடு, ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து, அருமை இரட்சகர் தேடுகிறார் என்பதையே நமக்கு வெளிப்படுத்துகிறது.
காணாமல்போன ஆட்டின் உவமையிலே நூறு ஆடுகளில் ஒரு ஆடு காணாமல்போனது. இரண்டாவது உவமையிலே பத்து வெள்ளிக்காசில் ஒரு வெள்ளிக்காசு காணாமல்போனது. மூன்றாவது உவமையிலே இரண்டு குமாரரில் ஒருவனை தகப்பன் இழக்கவேண்டியதாயிற்று. இரண்டில் ஒன்றை இழப்பது எத்தனை அதிகமான வேதனையைத் தரும்! ஒரு ஆட்டை இழக்கலாம், மாட்டை இழக்கலாம், பணத்தை இழக்கலாம், பொருட்களை இழக்கலாம். ஆனால் பாலூட்டி சீராட்டி வளர்த்த சொந்த கர்ப்பப் பிறப்பான மகனை இழப்பது எத்தனை வேதனையானது! ஆட்டைப் பார்க்கிலும், வெள்ளிக்காசைப் பார்க்கிலும் மனுஷன் விசேஷித்தவன் அல்லவா? அவனுக்குள் விலையேறப்பெற்ற ஆத்துமா இருக்கிறது அல்லவா?
ஒரு இளைய குமாரன் தகப்பனுடைய அன்பைத் தெரிந்துகொள்ளவில்லை. உலக சிநேகிதங்களைத்தான் தெரிந்துகொண்டான். தகப்பனோடு இருப்பதைப்பார்க்கிலும் நண்பர்களோடு உல்லாசமாய் இருக்கவே விரும்பினான். தகப்பனுடைய அன்பைக்காட்டிலும் உலக சிநேகிதமே அவனுக்குப் பெரிதாயிருந்தது.
ஒருவன் கிறிஸ்துவைவிட்டு உலக உல்லாசங்களைத் தெரிந்துகொண்டு செல்லும்போது அவருடைய உள்ளம் எவ்வளவு ஆழமாய்ப் புண்படும்! நம்முடைய ஆண்டவர் அன்புள்ளவர் மட்டுமல்ல, அன்புக்காக ஏங்குகிறவரும்கூட. “நீ என்னை நேசிக்கிறாயா” என்று திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்கிறார். கர்த்தரைப் பங்காகக்கொண்டு அவருடைய பாதத்திலே தரித்திருப்பதையே அவர் விரும்புகிறார். மார்த்தாளைப் பார்த்து, “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (லூக். 10:41,42).
இளைய குமாரனின் பாவ சந்தோஷங்கள் முடிவிலே அவனைப் பன்றியின் அருகே அழைத்துச்சென்றது. கொடிய வறுமைக்குள் வழிநடத்தியது. கர்த்தருடைய அன்பிலிருந்தும் ஐக்கியத்திலிருந்தும் விழுகிறவர்களுடைய நிலைமை இதைவிட பரிதாபமாய் இருக்கும். பணம் இருக்கும்போது ஒட்டிக்கொண்ட சிநேகிதர்கள் பணம் வற்றியபோது ஓடி ஒளிந்துகொண்டார்கள். கெட்டகுமாரனுக்குப் புத்தி தெளிந்தபோது சிந்திக்க ஆரம்பித்தான். என் தகப்பனுடைய வீட்டிலே வேலைக்காரர்களுக்குக்கூட பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன் என்று எண்ணி கண்ணீரோடு தகப்பனிடத்தில் திரும்பினான்.
கெட்டகுமாரன் வீட்டுக்குத் திரும்புகிறதை அந்த வீட்டிலுள்ள வேலைக்காரர்களும் உறவினர்களும் காண்பதற்கு முன்பாக, முதலாவது கண்டது அந்த அன்புள்ள தகப்பன்தான். தேவபிள்ளைகளே, பரம தகப்பன் உங்களுக்காகக் காத்திருக்கிறார். ‘என்னை நேசிக்கின்றாயா’ என்று கேட்கிறார்.
நினைவிற்கு:- “அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).