செப்டம்பர் 10 – தேவ வசனம்!
“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” (யோவா. 10:10).
இவ்வுலகத்தில் திருடனானவன் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வைத்திருப்பவர்களின் பணத்தை கத்தியைக் காட்டி, எளிதாகப் பிடுங்கிக்கொள்ளுகிறான். சாத்தானும்கூட ஒரு திருடன்தான். அவன் சந்தோஷத்தைத் திருடுகிறான். சமாதானத்தைத் திருடுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளத்திலே விதைக்கப்பட்ட தேவ வசனத்தைத் திருடுகிறான்.
சுவிசேஷகர்கள் வசன விதையை விதைக்கையில், வழியருகே விழுந்த விதைகளை பறவைகள் வந்து பட்சித்துப்போட்டன (மத். 13:4). இதைக்குறித்து இயேசு விளக்கம் சொல்லுகையில், “ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்” (மத். 13:19) என்றார்.
உங்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட கர்த்தருடைய வசனம் ஆவியும் ஜீவனுமாய் இருக்கிறது. அந்த விதைகள் முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தரக்கூடியதாக இருக்கிறது. சாத்தான் வசனத்தை எடுத்துவிடாதபடி கர்த்தருடைய வசனத்தை உங்கள் இருதயத்தில் வைத்து பாதுகாப்பீர்களென்றால், பரிசுத்த வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள்.
வேத வசனங்கள் எல்லாம் ஆவியானவரால் அருளப்பட்டவை. அவை விலையேறப்பெற்றவை. “அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” (சங். 19:10). “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கிறது” (சங். 12:6). “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்” (சங். 119:72).
நீங்கள் திருடனுடைய கையிலே விழாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டும். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற மனிதனை திடீரென்று திருடர்கள் தாக்கினார்கள். “அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்” (லூக். 10:30).
பாருங்கள், அந்த மனிதன் கள்ளர்களை எதிர்க்கவில்லை. சாத்தானை எதிர்க்கக்கூடிய ஆவியின் பட்டயத்தை எடுத்து, திருடர்களோடு யுத்தம் செய்யவில்லை. இயேசுவை சோதிக்க திருடனான பிசாசு வந்தபோது, இயேசுகிறிஸ்து வேத வசனமாகிய ஆவியின் பட்டயத்தோடு சாத்தானை எதிர்த்து நின்று ஜெயம் பெற்றார். ஆகவே, “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபே. 6:17).
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி. 4:12). தேவபிள்ளைகளே, எவ்வளவுக்கெவ்வளவு வேதவசனத்தை வாசித்து, தியானித்து மனப்பாடம் செய்யமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு செய்யுங்கள். கர்த்தருடைய வசனத்திற்கு முன்பாக சாத்தானால் நிற்க முடியாது.
நினைவிற்கு:- “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).