ஆகஸ்டு 24 – தொடுங்கள்!
“அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்” (மத். 14:36).
அப். யோவான், “நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” என்று எழுதுகிறார் (1 யோவா. 1:1).
அன்று சிலர் அவரைக் கைகளினால் தொட்டார்கள். சிலர் விசுவாசத்தினால் அவரைத் தொட்டார்கள். ஒரு கானானானிய ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்தாள். அவளுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவளுடைய மகள் பிசாசின் போராட்டத்தால் மிகவும் வேதனைப்பட்டாள். அவள் புறஜாதிப் பெண்ணாய் இருந்ததினால் இயேசுவை எளிதாய் தொடமுடியவில்லை. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்று இயேசுவும் சொல்லிவிட்டார்.
ஆனால் அவளோ எப்படியும் இயேசுவைத் தொடும்படி விரும்பினாள். எப்படித் தொட்டாள் தெரியுமா? “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் மேஜையின் கீழிருக்கும் நாய்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே” (மாற். 7:28) என்ற வார்த்தையினால் இயேசுவின் உள்ளத்தை ஆழமாய் அவள் தொட்டுவிட்டாள்! தன் தாழ்மையினாலும், விசுவாச வார்த்தையினாலும் மகளுக்கு விடுதலை பெற்றுக்கொண்டுவிட்டாள்!
அதுபோலவே நூற்றுக்கு அதிபதியும் இயேசுவைத் தொட்டான். அதுவும் விசுவாச வார்த்தைகளினால்தான். “ஆண்டவரே! …. ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” (மத். 8:8). அந்த விசுவாச வார்த்தைகள் இயேசுவினுடைய உள்ளத்தைத் தொட்டது. இயேசுகூட அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று சொல்லி அவனுடைய வேலைக்காரனை சொஸ்தமாக்கினார்.
ஒரு பிறவிக் குருடன் இயேசுவைத் தன் கைகளினால் அல்லாமல், தன் சத்தத்தினாலும் விடாமுயற்சியினாலும் தொட்டான். ‘தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்’ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சி கதறினான். அவனுடைய வார்த்தைகள் இயேசுவினுடைய இருதயத்தைத் தொட்டு உருகப்பண்ணிற்று. அவன் பார்வையடைந்தான்!
ஒரு ஏழை விதவை கர்த்தருடைய உள்ளத்தைத் தொட்டாள். தனக்கு இருந்த எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் கொடுத்து கர்த்தருடைய உள்ளத்தைத் தொட்டுவிட்டாள். இரண்டு காசு போட்ட விதவையை இயேசு சந்தோஷத்துடன் பாராட்டி, “மற்ற எல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள்” என்று சொன்னார்.
சகேயு கர்த்தரைத் தொட்டார். காட்டத்தி மரத்தில் ஏறி இருந்த சகேயுவினுடைய உள்ளம் ஒரு புது தீர்மானத்தை எடுத்தது. நான் யாரிடத்திலாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், அதை நாலத்தனையாய் திரும்பச் செலுத்திவிடுகிறேன் என்ற தீர்மானத்தை அவர் மேற்கொண்டார். இந்த தீர்மானம் இயேசுவினுடைய உள்ளத்தைத் தொட்டது. ஆண்டவர் அன்போடு ‘இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது’ என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.
தேவபிள்ளைகளே, நீங்களும் இயேசுவை உங்களுடைய விசுவாச வார்த்தையினால் தொடும்போது, உங்களுக்கும் அவர் விடுதலையைத் தர வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்” (எரே. 1:9).