ஆகஸ்டு 10 – தனிமையும் பாடுகளும்!
“அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக. அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக” (யோபு 3:6,7).
சாத்தானுடைய சோதனையினிமித்தம் யோபு பக்தன் தனித்த நிலைமைக்கு வந்தார். ஒரே நாளில் அவருக்கு இருந்த எல்லா சொத்துக்களும், பிள்ளைகளும் அவரைவிட்டுப் போய்விட்டார்கள். மனைவியின் ஐக்கியமோ, அன்போ, ஆறுதலின் வார்த்தைகளோகூட அவருக்குக் கிடைக்கவில்லை.
அவள் யோபுவைப் பார்த்து, “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9).
இந்தத் தனிமை யோபு அவராகவே தன்மேல் திணித்துக்கொண்ட தனிமை அல்ல. சாத்தான் அவர்மேல் வலுக்கட்டாயமாயமாகப் புகுத்தின தனிமை. இந்த தனிமைப் பாதையில் யோபு துயரத்தோடு கடந்துசெல்லவேண்டியதிருந்தது. ஆனாலும் கர்த்தர் தன்மேல் இருக்கிற தனிமையை ஒருநாள் நிச்சயமாய் மாற்றுவார் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது.
யோபு பக்தன் சொல்லுகிறார், “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10). கர்த்தர் சொல்லுகிறார், “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசா. 43:2).
யோபுவின் தனிமையின் வேதனையை மாற்ற கர்த்தர் முகமுகமாய் யோபு பக்தனுக்குத் தரிசனமானார். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” (யோபு 19:25,26) என்று முழங்கினார்.
அந்த தரிசனம் யோபுவின் தனிமையையும் சிந்தனையையும் மாற்றி, தேவபிரசன்னத்தையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் கொண்டுவந்தது. ‘நான் என் மீட்பரோடு என்றென்றும் வாழுவேன். அவரை நானே பார்ப்பேன். என்னுடைய கண்கள் அவரைக் காணும்’ என்று அவர் விசுவாசித்ததுபோலவே உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்டார். சாத்தானின் சோதனைகளுக்கு ஒரு முடிவு உண்டாக்கி, தனிமையின் வேதனையிலிருந்து யோபுவை விடுவித்தார். வேதம் சொல்லுகிறது, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36).
யோபு பக்தனுக்கு தனிமை இருந்ததுபோல, அப். பவுலுக்கும் தனிமை இருந்தது. அவர் சகோதரரைவிட்டும், சபையைவிட்டும், பிரிக்கப்பட்டு ரோமாபுரி சிறைச்சாலையிலே தனிமையாய் அடைக்கப்பட்டார். தேவபிள்ளைகளே, “எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கவேண்டுமென்பதே” அவர் தனிமையில் கற்றுக்கொண்ட பாடமாய் இருந்தது.
நினைவிற்கு:- “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (2 தீமோ. 4:17).