Appam, Appam - Tamil

ஆகஸ்டு 08 – ஜீவனைத் தருகிறார்!

“கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர் (1 சாமு. 2:6).

அன்னாள் முதலாவது, கர்த்தருடைய பரிசுத்த அழகைப் புகழ்ந்து போற்றினாள். இரண்டாவதாக, கர்த்தருடைய ஞானத்தைப் புகழ்ந்து போற்றினாள். மூன்றாவதாக, கர்த்தருடைய உயிர்ப்பிக்கிற வல்லமையைக்குறித்துப் போற்றும்வகையில் கர்த்தர் ஜீவாதிபதி, மாம்சமான யாவருக்கும் ஜீவனைக் கொடுக்கிறவர் என்றெல்லாம் புகழ்ந்தாள்.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25,26) என்று இயேசுகிறிஸ்து சொன்னார்.

நீங்கள் இந்த ஜீவனுள்ளோர் தேசத்திலே வாழும்படி உங்களுக்குக் கிருபையாய் உயிராகிய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். கல்வாரிச் சிலுவையிலே தம்முடைய சொந்த ஜீவனை உங்களுக்காக அர்ப்பணித்து, தியாகம் செய்திருக்கிறார். பரலோக இராஜ்யத்திற்குச் செல்லும்போது, அவர் நித்திய ஜீவனைத் தந்திருக்கிறதை அறிந்துகொள்வீர்கள். “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” (யோவா. 1:4). அவர் ஒருவர்தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறவர் (யோவா. 14:6) என்று அப். யோவான் எழுதுகிறார்.

சாறிபாத் விதவையின் மகன் இறந்துபோனபோது எலியாவுக்கோ, “கர்த்தர் உயிர்ப்பிக்கிறவர், ஜீவனைத் தருகிறவர்” என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆகவே தேவனை நோக்கி, “கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்” (1 இரா. 17:21,22). அதுபோலவே எலிசா தீர்க்கதரிசி சூனேமியாளின் மகன் இறந்தபோது கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தார். அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழு தரம் தும்மித் தன் கண்களைத் திறந்தது (2 இரா. 4:35).

ஜெபிப்பதற்கென வந்த ஒருவர் இவ்வாறு சொன்னார்: “எனக்கு 58 வயதிலே மிகுந்த பெலவீனமாய் இருக்கிறது. எல்லா நோய்களும் என் சரீரத்திலே வந்துவிட்டது. நான் 60 வயதுவரையாகிலும் உயிரோடு இருக்கும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள்” என்றார். நீண்ட ஆயுளைத் தர கர்த்தர் கிருபையுள்ளவராய் இருக்கும்போது, ஏன் 60 வயதுவரை மட்டும் கேட்கிறார் என்பது புரியாமல் அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் “நான் எனது அரசுப்பணியை முழுவதுமாக முடித்துவிட்டு, ஓய்வூதியப் பலன்களைப் பெறவிரும்புகிறேன்” என்று சொன்னார்.

பாருங்கள், கர்த்தர் எனக்கு ஆயுளைக் கொடுத்தால் நான் ஊழியத்தைச் செய்வேன் என்றும், ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து கர்த்தரண்டை வழிநடத்துவேன் என்றும் சொல்லவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் பணிக்காலத்தை முழுவதுமாக முடிக்கும்போது கிடைக்கவிருந்த பணத்தின்மேலேயே இருந்தது. தேவபிள்ளைகளே, உங்களுடைய நாட்கள் கர்த்தருடைய கையிலே இருக்கிறது. நீங்கள் அவரை மகிமைப்படுத்த தீர்மானிப்பீர்களென்றால், நிச்சயமாகவே நீடித்த ஆயுளால் அவர் உங்களைத் திருப்தியாக்குவார்.

நினைவிற்கு:- “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6