ஆகஸ்டு 02 – ஜனத்தினால் வரும் தண்டனை!
“இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்” (ஆதி. 4:14).
சகோதர அன்பு இல்லாமல் ஆபேல்மேல் பொறாமைகொண்டு அவனைக் கொலை செய்த காயீன், ஆவிக்குரிய பிரகாரமாய் தற்கொலை செய்துகொண்ட நிலைமைக்குள் கடந்து வந்தான். அவன் செய்த பாவம் அவனைத் தனிமையிலே அலைந்து திரிய வைத்தது.
அநேகர் சகோதர பாசமில்லாமல், உறவுமுறைகளை மதிக்காமல் சிறு காரியத்திற்கும் கசப்புகளை உண்டாக்கிக்கொண்டு தங்களைச் சுற்றி தாங்களே தனிமைக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளுகிறார்கள். சகோதர ஐக்கியத்திலுள்ள ஆசீர்வாதத்தை அவர்கள் இழந்துபோகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் மருமகளாக திருமணமாகி வந்த ஒரு பெண் கணவன் குடும்பத்திலுள்ளவர்களை மதிக்கவில்லை. யார் வந்தாலும் உதவி கேட்டு கடன் வாங்கத்தான் வருகிறார்கள் என்று எண்ணி வெறுப்பாள். விருந்தினரை அவள் அற்பமாகவும், ஏளனமாகவும் நடத்தியதால் உறவினர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு வருவதில்லை. கணவனைத் தன் கைக்குள்ளேயே வைத்துக்கொண்டு எல்லா உறவுகளுக்கும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டாள். சில வருடங்களுக்குப் பிறகு அவள் சுகவீனப்பட்டபோது, அவளுக்கு உதவி செய்யவோ, ஆறுதல் கூறவோ ஒருவரும் இல்லாமல்போனாள். தனிமையின் வேதனை அவளுடைய உள்ளத்தைப் பிழிந்தது.
தேவபிள்ளைகளே, சகோதர அன்பையும் நட்புறவையும், பாசத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (சங். 133:1,3) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
வேதம் சொல்லுகிறது, “தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” (1 யோவா. 2:11). சகோதர அன்புக்காக பாடுபடுங்கள். சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. சகோதரர்களை வீண்வார்த்தைகளினாலோ, கோபமான வார்த்தைகளினாலோ புண்படுத்திவிடாதிருங்கள். ஒப்புரவாகி அவர்களுடைய காயங்களை ஆற்றுங்கள்.
காயீன் சகோதர உறவை அடைத்துக்கொண்டதுடன், தேவனுக்கும் அவனுக்கும் இடையேயுள்ள உறவையும்கூட அடைத்துக்கொண்டு தனிமைக்குள் சென்றான். தேவ சமுகத்தைவிட்டு விலகிப்போனான். “நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்” (ஆதி. 4:14) என்று தனக்குத்தானே சாபமிட்டுக்கொண்டான்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கும் மற்ற மனுஷருக்கும் இடையேயுள்ள உறவுமுறையைச் சீர்படுத்துங்கள், செப்பனிடுங்கள், ஒப்புரவாகுங்கள். அதைவிட மேலாக, கர்த்தருக்கும், உங்களுக்கும் இடையேயுள்ள உறவுமுறையையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே” (1 யோவா. 3:12).