Appam, Appam - Tamil

அக்டோபர் 20 – நீதியின் பலிகள்!

“நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்” (சங். 51:19).

ஒரு ஆயக்காரனும், பரிசேயனும் தேவனுடைய ஆலயத்திற்கு வந்தார்கள். பரிசேயன் ஜெபிக்கும்போது தன்னுடைய சுயநீதியை எல்லாம் சொல்லி ஆடம்பரமாக ஜெபம்பண்ணினான். ஆனால், ஆயக்காரனோ நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடு தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு ‘தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்று ஜெபித்தான் (லூக். 18:10-13).

நல்ல காரியங்களைச் செய்த பரிசேயன்மேல் தேவன் பிரியப்படவில்லை. ஆனால் நொறுங்குண்ட இருதயத்தோடு, இருதயத்தை ஊற்றி ஜெபித்த ஆயக்காரனையே நீதிமானாகக் கண்டார். தேவகிருபை உங்களுக்குள் கிரியை செய்ய இடம் கொடுக்கும்போது உங்களுக்குள் நொறுங்குண்ட ஆவி உண்டாகிறது. இருதய கடினம் மாறி, நொறுங்குண்ட நருங்குண்ட பலியாக சமர்ப்பிக்க வேதம் உங்களுக்கு மூன்று வழிகளைச் சொல்லுகின்றன.

முதலாவதாக, வேத வசனங்கள். பேதுரு ஆவியில் நிரம்பி ஜீவவார்த்தைகளை அபிஷேகத்தோடு பேசியபோது கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள் (அப். 2:37). கர்த்தருடைய வார்த்தைகள் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போல கடினமான இருதயத்தையும் உடைக்கும். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் …. இருக்கிறது” (எபி. 4:12).

இரண்டாவதாக, உங்களுக்குள்ளே நொறுங்குண்ட இருதயத்தை ஆவியானவர் கொண்டுவருகிறார். “அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்” என்று சொல்லுகிறார் (எசே.11:19).

ஆம் ஆவியானவர் உங்களுக்குள்ளிருந்து பெருமூச்சோடு ஜெபிக்க இடம் தரும்போது தேவசமுகம் உங்களை மூடிக்கொள்ளுகிறது. அப்பொழுது கர்த்தருடைய பிரசன்னத்தினால் பர்வதங்கள் போன்ற கடினமான இருதயம் மெழுகுபோல உருகுகிறது (சங். 97:5). ஆகவேதான் “ஜனங்களே, அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்று தாவீது சொல்லுகிறார் (சங். 62:8).

மூன்றாவதாக, பாடுகளும் உபத்திரவங்களும் உங்களுடைய இருதயத்தை நொறுங்குண்டுபோகச் செய்கின்றன. உதாரணமாக அன்னாளின் வாழ்க்கையை வாசித்துப் பாருங்கள். அவளுக்குப் பிள்ளை இல்லாத வேதனை ஒருபக்கம் இருந்தது. மலடி என்ற அவச்சொல்லோடுகூட அவளுடைய சக்களத்தி நாள்தோறும் அவளைப் புண்படுத்திப் பேசிய வார்த்தைகள் அவள் இருதயத்தை உடைத்தது.

ஆகவே, அன்னாள் நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தோடு தன் இருதயத்தை தேவசமுகத்திலே ஊற்றி ஜெபித்தாள் (1 சாமு. 1:15). ஆகவே அவள் கர்த்தருக்குப் பிரியமானவளாய் காணப்பட்டது மாத்திரமல்ல, பெரிய தீர்க்க தரிசியான சாமுவேலையும் பெற்றெடுத்தாள். தேவபிள்ளைகளே, நீங்களும் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கும்போது, கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் காணப்படுவீர்கள். அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “ஸ்தோத்திர பலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (ஆமோ. 4:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.