Appam, Appam - Tamil

அக்டோபர் 01 – இது காலமா?

“பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?” (2 இரா. 5:26).

இது காலமா என்று எலிசா தீர்க்கதரிசி கேட்கிறார். சொத்தோடு சொத்தை சேர்த்துக்கொண்டேயிருப்பதற்கும், வயலோடே வயலைச் சேர்த்துக்கொண்டிருப்பதற்கும் இது காலமா என்பதே அவரது கேள்வி.

எலிசாவின் வேலைக்காரனின் பெயர் கேயாசி. அவனுடைய உள்ளம் பண ஆசையினால் நிரம்பியிருந்தது. எலிசாவைப் பின்பற்றி அவர்மேலிருந்த ஆவியின் வரத்தை ஆயிரம் மடங்காய்ப் பெற்று கர்த்தருக்கு வல்லமையான ஊழியம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டு, வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும், திராட்சத்தோட்டங்களையும் வாங்குவதிலேயே அவன் தனது மனதைச் செலுத்தினான்.

சீரியா தேசத்து இராணுவ தளபதியான நாகமான், அவனது குஷ்டரோகம் சுகமாகி, தன் தேசத்திற்குத் திரும்பிச் செல்லுகிறதைப் பார்த்தவுடன் நாகமானிடத்திலிருந்து தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று அவன் எதிர்பார்த்தான். தன் எஜமானாகிய எலிசாவுக்குத் தெரியாமல் நாகமானின் இரதத்தின் பின்னால் ஓடினான்.

நாகமானைப் பார்த்து, “ஐயா, தீர்க்கதரிசிகளின் புத்திரர் இரண்டுபேர் எப்பிராயீம் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் வாங்கிக்கொண்டு வரும்படி என் எஜமான் என்னை அனுப்பினார்” என்றான்.

இப்படிப் பொய் சொல்லி பொருளாசையில் சாய்ந்து கர்த்தருக்கு துரோகம் செய்த கேயாசியின்மேல் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது. எலிசா கேயாசியைப் பார்த்து, “நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்: உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்” (2 இரா. 5:27).

கர்த்தர் கிருபையாய்க் கொடுத்த பகற்காலத்தை அவருடைய நாமத்தின் மகிமைக்காகப் பயன்படுத்தாமல், வெளிநாட்டுப் பணங்கள்மேல் மோகம் கொண்டு, கள்ளக்கணக்கு எழுதி, கள்ள அறிக்கை எழுதி, பொருளாசையிலே மயங்கிக் கிடக்கிறவர்கள்மேல் எவ்வளவு கொடிய கோபாக்கினை வரும்!

வேதம் எச்சரிக்கிறது, “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:10).

இன்றைக்கு நம் தேசத்திலே லஞ்ச லாவண்யங்கள் பெருகிவிட்டது. சின்ன காரியத்தை நிறைவேற்றக்கூட லஞ்சம் கொடுக்கவேண்டியதாயிருக்கிறது. பணத்தைச் சம்பாதிக்க மனிதர் குறுக்கு வழிகளில் செல்லுகிறார்கள். பொய்களைப் பேசி வருமானத்தைப் பெருக்க முற்படுகிறார்கள். நித்தியம் அவர்களைப் புறக்கணிக்கும்போது, அவர்கள் பரிதாபமாய் நிற்பார்கள்.

தேவபிள்ளைகளே, நித்தியமான காரியங்களில் உங்களுடைய மனதைச் செலுத்துங்கள். உங்களுடைய நேரத்தைப் பயனுள்ளதாய் செலவழியுங்கள். பரலோகக் காரியங்களுக்கு உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என்றென்றுமாய் மகிழ்ந்து களிகூருவீர்கள்.

நினைவிற்கு:- “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற். 1:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.