ஜூலை 27 – பலிபீடத்தின்மேல் அக்கினி!
“பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது” (லேவி. 6:13).
பழைய ஏற்பாட்டில், பலிபீடம்தான் பக்தர்கள் தேவனை சந்திக்கிற இடமாக இருந்தது. பலிபீடத்திலே பலிகளை தகனபலியாகக் கர்த்தருக்குச் செலுத்தும்போது, தேவன் அந்த சுகந்த வாசனையை முகர்ந்தார். மகிழ்ச்சியோடு அந்த பலிபீடத்தின் ஜுவாலையிலே இறங்கி வந்து, தம்முடைய பிள்ளைகளோடு பேசினார்.
புதிய ஏற்பாட்டில் நீங்களே கர்த்தருடைய பலிபீடங்களாக விளங்குகிறீர்கள். உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றையும் தேவனுடைய பலிபீடமாக அர்ப்பணித்துவிடவேண்டும். ஜீவபலியாக ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். அப்பொழுது உங்கள் உள்ளமாகிய பலிபீடத்தில் அக்கினி இறங்கும்.
பழைய ஏற்பாட்டிலே மூன்றுவிதங்களில் பலிபீடத்தைக் கட்டினார்கள். முதலாவது, அது மண்ணினால் கட்டப்பட்டது. இரண்டாவது, உளியினால் செதுக்கப்படாத முழு கற்களினால் கட்டப்பட்டது. மூன்றாவது, ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பலிபீடமானது சித்திம் மரத்தினால் செய்யப்பட்டு வெண்கலத் தகட்டினால் மூடப்பட்டது.
மண்ணால் செய்யப்பட்ட பலிபீடம் நம்முடைய சரீரத்திற்கு அடையாளமாய் இருக்கிறது (சங். 103:14). கற்களினால் கட்டப்பட்ட பலிபீடம் நம்முடைய ஆத்துமாவைக் குறிக்கிறது. மரத்தினால் செய்யப்பட்டு வெண்கலத்தால் போர்த்தப்பட்ட பலிபீடம் நம்முடைய ஆவியைக் குறிக்கிறது.
இன்றைக்கு ஆண்டவர், “மகனே, உன் ஆவி, ஆத்துமா, சரீரத்தை பலிபீடத்தின்மேல் சமர்ப்பித்துவிடு. முற்றும் உன்னை அர்ப்பணித்துவிடு. இன்றைக்கு நான் உன்மேல் பரலோக அக்கினியைப் போடப்போகிறேன். அக்கினியால் நிரப்பப்போகிறேன், என் அபிஷேகத்தை அளவில்லாமல் ஊற்றப் போகிறேன். நீ எனக்காகப் பற்றி எரிய வேண்டும். நான் உன்னில் போடுகிற அக்கினி ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது” என்று சொல்லுகிறார்.
கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் பரிசுத்த ஆவியின் அக்கினி விலையேறப்பெற்றது. இந்த அக்கினி அபிஷேகத்தின் மேன்மையையும், விலை மதிப்பையும் உணராத அநேகர், அதை நஷ்டப்படுத்திவிடுகிறார்கள். லவோதிக்கேயா சபையைக்குறித்து கர்த்தர் துக்கத்தோடு சொன்னார், “நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:15,16) என்றார்.
அக்கினியாக இருக்கவேண்டிய தேவஜனங்கள் வெதுவெதுப்பாய் இருக்கக்கூடாது. மங்கி எரிகிற திரியாக இருக்கக்கூடாது. தீவட்டிகளை அணைந்துபோன நிலைமையில் வைத்திருந்த புத்தியில்லாத கன்னிகைகளைப்போல இருக்கக்கூடாது. அக்கினி பற்றி எரிய வேண்டும். குணசாலியான ஸ்திரீயின் விளக்கு ‘இரவிலேயும் அணையாதிருக்கும்’ (நீதி. 31:18).
தேவபிள்ளைகளே, இரவிலும்கூட கர்த்தருடைய அன்பும், ஊக்கமான ஜெபமும் உங்கள் உள்ளத்தில் அக்கினியாய்ப் பற்றி எரிந்துகொண்டிருக்கவேண்டும்.
நினைவிற்கு:- “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோம. 12:1).