Appam, Appam - Tamil

ஜூலை 10 – சிங்காசனத்திலிருந்து சத்தம்!

“நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது (வெளி. 19:5).

இதுவரை வானத்திலிருந்து பிறந்த பல சத்தங்களையும், அந்த சத்தங்களின் நோக்கத்தையும், அந்த சத்தங்களின் எதிர்பார்ப்பையும்குறித்து தொடர்ந்து தியானித்துவந்தோம். இன்றைக்குப் பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து வருகிற சத்தத்தைக்குறித்து சற்று தியானிப்போமாக.

பூமியிலிருந்து வருகிற சத்தங்களுக்கு செவிகொடுப்பதைப்பார்க்கிலும், பரலோகத்திலிருந்து, தேவனுடைய சிங்காசனத்திலிருந்து, தேவாதி தேவனிடத்திலிருந்து வருகிற சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து செவிகொடுப்பது எத்தனை அவசியம்! அந்த சத்தத்துக்குரியவர் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறபடியால், அந்த சத்தத்தை யாரும் அசட்டை செய்யமுடியாது.

வெளிப்படுத்தின விசேஷத்தில், மூன்று இடங்களிலே சிங்காசனத்திலிருந்து புறப்பட்ட சத்தங்களை நீங்கள் கேட்கலாம். முதலாவதாக, “சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன” (வெளி. 4:5) என்று வேதம் சொல்லுகிறது. பூமியில் ஒவ்வொரு தேசத்துக்கும் சிங்காசனம் உண்டு. அதில் அமர்கிற இராஜாக்களுக்கு ஆளுகையும், அதிகாரமும் உண்டு. சில சிங்காசனங்களில் சர்வாதிகாரிகள் அமர்ந்திருக்கிறார்கள். சில சிங்காசனங்களில் ஜனாதிபதிகளும், சிலவற்றில் பிரதம மந்திரிகளும் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்த உலக சிங்காசனங்களெல்லாம் தற்காலிகமானவையே.

நேபுகாத்நேச்சாருக்கு பெரிய சிங்காசனம் இருந்தபோதிலும்கூட, அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார். அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று (தானி. 5:20).

ஆனால் பரலோக சிங்காசனமோ, நித்தியமான சிங்காசனமாயிருக்கிறது. அதிலே வீற்றிருக்கிற பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்திலே கெம்பீரமானவராய் இயேசு கிறிஸ்து வீற்றிருக்கிறார். அந்த சிங்காசனத்திலிருந்து மின்னல்களும், இடிமுழக்கங்களும், சத்தங்களும் புறப்பட்டன. மின்னல்கள் அவர் பரிசுத்தத்தில் பயங்கரமானவர் என்பதையும், இடிமுழக்கங்கள் அவர் வல்லமையில் பராக்கிரமமுள்ளவர் என்பதையும், சத்தங்கள் அவர் மனிதரோடு இடைபட்டு பிரமாணங்களைக் கொடுக்கிறவர் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

இப்பொழுதும்கூட, அந்த சிங்காசனத்திலிருந்து ஒரு சத்தம் பிறந்த வண்ணமாயிருக்கிறது. “மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது” (வெளி. 19:5).

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைத் துதிக்கும்படியாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தரைத் துதித்து, ஸ்தோத்திரித்து, ஆராதித்து, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

நினைவிற்கு:- “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.