Appam, Appam - Tamil

ஜூலை 07 – பெரிய சத்தம்!

“அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது (வெளி. 12:10).

வானத்திலிருந்து வந்த எல்லா சத்தங்களிலும் பெரிய சத்தத்தை இங்கே நாம் பார்க்கிறோம். இந்த சத்தம் நான்கு காரியங்களை நமக்கு வாக்களிக்கிறது. முதலாவது, இரட்சிப்பு. இரண்டாவது, வல்லமை. மூன்றாவது, தேவனுடைய ராஜ்யம். நான்காவது, கிறிஸ்துவின் அதிகாரம்.

இதோடு அந்த சத்தம் நின்றுவிடவில்லை, “பரலோகங்களே, அவைகளில் வாசமாயிருக்கிறவைகளே களிகூருங்கள்” என்று சொல்லி கட்டளையிடுகிறது. ஆம், இரட்சிப்பிலே ஒரு களிகூருதல் உண்டு. வல்லமையிலே ஒரு களிகூருதல் உண்டு. தேவனுடைய ராஜ்யமே களிகூருதல் நிறைந்த ஒரு இடமாகும். கிறிஸ்துவைத் துதிக்கிறதிலே களிகூருதல் உண்டு. நானும், நீங்களும் களிகூரும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

களிகூருதல் என்ற வார்த்தை மகா ஆழமானதும், மேன்மையானதுமாகும். சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றைப்பார்க்கிலும், மேன்மையான அனுபவம்தான் களிகூருதல் என்பதாகும். அதிலேயும் ஆவியிலே களிகூருதல் இன்னும் அதிக விசேஷமானதாகும்.

கிறிஸ்துவின் தாயாரான மரியாள், “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக். 1:46,47) என்று சொன்னார். இயேசுகிறிஸ்துவும்கூட, ஆவியிலே களிகூர்ந்தார். “பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (லூக். 10:21) என்று அவர் சொன்னார்.

கர்த்தரிலே களிகூருவது ஒரு நல்ல பாக்கியமான அனுபவம். அப்படிக் களிகூருங்கள் என்று வானத்திலிருந்து வரும் சத்தம் நம்முடைய செவிகளில் தொனித்துக்கொண்டிருக்கிறது. துன்பப்பட்டு, வேதனைப்பட்டு, துக்கமுகமாயிருக்காதிருங்கள். கர்த்தர்மேல் உங்கள் பாரங்களை வைத்துவிட்டு கர்த்தரிலே களிகூருங்கள். வேதத்திலே, முதன்முதல் களிகூர்ந்த பக்தன் ஆபிரகாம்தான். இயேசு சொன்னார்: “உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்” (யோவா. 8:56).

இன்று நீங்கள் களிகூருவதற்கு ஆயிரமாயிரமான காரணங்கள் உண்டு. கிறிஸ்து இரட்சகராய் உங்களுடைய உள்ளத்தில் வீற்றிருக்கிற அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை எண்ணியெண்ணி களிகூருங்கள். இரண்டாவதாக, அவர் வல்லமையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அது பரிசுத்த ஆவியின் வல்லமை.

மூன்றாவதாக, தேவனுடைய இராஜ்யத்தை எண்ணிக் களிகூருங்கள். நீங்கள் அந்த ஒளிமயமான இராஜ்யத்தில் பிரவேசிக்கும்போது, நித்தியக் களிகூருதல் உண்டாகும். நான்காவது, கிறிஸ்துவின் அதிகாரத்தைச் செயல்படுத்தி களிகூருங்கள். அவர் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுடையவர்.

கர்த்தரிலே எப்போதும் களி கூர்ந்த தாவீது ராஜா, “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக” (சங். 5:11) என்றார்.

நினைவிற்கு:- “கர்த்தாவே…. உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்” (சங். 9:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.