Appam, Appam - Tamil

செப்டம்பர் 04 – எங்கே போனாலும்!

“ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே (வெளி.14:4).

அப். யோவான் ஆவிக்குள்ளாகி பரலோக இராஜ்யத்திலுள்ள சீயோன் பர்வதத்தை நோக்கிப்பார்த்தபோது, அங்கே பிதாவினுடைய நாமம் தங்கள் நெற்றியில் எழுதப்பட்டிருக்கிற லட்சத்து நாற்பத்துநான்காயிரம்பேர் நிற்கக்கண்டார்.

ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே. ஆம், அவர்களுடைய கால்களில் ஒரு தீர்மானம் இருந்தது. ஆட்டுக்குட்டியானவரை எப்பொழுதும், எக்காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் பின்பற்றவேண்டுமென்பதே. அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்கள் பேதையரானாலும் திசைக்கெட்டுப்போவதில்லை.

உங்களுடைய கால்களை பிரதிஷ்டை செய்யுங்கள். உங்கள் நடைகளை கிறிஸ்துவிலே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே வாழ்ந்து, பரிசுத்தப் பாதைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். “நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்” (1 பேது. 2:21).

ஒரு சகோதரி உபவாசமிருந்து, “ஆண்டவரே, சாது சுந்தர்சிங்கை நான் பார்க்கவேண்டும்” என்று ஜெபித்தார். அவர்களுக்கு கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். அதிலே ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து நடந்து செல்லுகிறதையும், அவருக்கு பின்னால் சாதுசுந்தர்சிங் நடக்கிறதையும் கண்டார். என்ன ஆச்சரியம்! இயேசு எந்த இடத்தில் தன் கால்களைப் பதித்தாரோ அதே இடத்தில் சாது சுந்தர்சிங் தன் கால்களைப் பதித்து இயேசு சென்ற பாதையில் தொடர்ந்து செல்வதைக் கண்டார்கள். சாது சுந்தர்சிங் கால்களில் பாதரட்சைகூட அணிந்துகொள்ளாமல் வெறுங்காலோடு கிறிஸ்துவைப் பின்பற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

கிறிஸ்து எப்படி பிதாவின் சித்தத்தை பூரணமாய்ச் செய்தாரோ, அதுபோல நாமும் கிறிஸ்துவின் சித்தத்தை பூரணமாய்ச் செய்யும்போது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம். அந்த அடிச்சுவடுகள் பரிசுத்தத்திற்கும், பரலோகத்திற்கும் நேராய் நம்மை வழிநடத்துகின்றன. ஆகவே, நான் பேசுவது சரிதானா, இந்த இடத்தில் கிறிஸ்து இருந்தால் என்ன பேசி இருப்பார், என்னுடைய வழியும் அவருடைய வழியும் ஒன்றாய் இணைந்து செல்வதாக இருக்குமா என்றெல்லாம் ஆராய்ந்து தற்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கிறிஸ்து வேதவாக்கியத்தின்படி நடந்தார். வேதவசனங்கள் நிறைவேறும்படி, அவர் தம்மையே அர்ப்பணித்தார். வேதவசனங்களே, அவர் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருந்தது. இயேசுகிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர் (யோவா. 14:6). “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவா. 10:9) என்று இயேசு சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பினால் வேதத்தைப் பின்பற்றுங்கள். அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்துவைமட்டுமே பிரியப்படுத்துவேன் என்று தீர்மானியுங்கள்.

நினைவிற்கு:- “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1 கொரி.11:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.