Appam, Appam - Tamil

ஆகஸ்டு 15 – கெம்பீரியுங்கள்!

“பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள் (சங். 149:5).

பகலெல்லாம் தேவசித்தம் செய்து, கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்கள் இரவு நேரங்களிலே மகிமையோடே களிகூர்ந்து தங்கள் படுக்கைகளின்மேல் நிச்சயமாகவே கெம்பீரிப்பார்கள்.

இரவு நேரம் சிலருக்கு மகிழ்ச்சியாகவும், சிலருக்கு துக்கமாகவும் இருக்கிறது. ஒரு இரவு என்பது எகிப்தியருக்கு புலம்பலும் அழுகையும், கண்ணீருமாய் இருந்தது. அவர்களுடைய தலைச்சன்களும், மிருக ஜீவன்களும் சங்கார தூதனால் அழிக்கப்பட்டதே அதன் காரணம். ஆனால் எந்தெந்த இஸ்ரவேலர்கள் தங்கள் நிலைக்கால்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை விசுவாசத்தோடு பூசியிருந்தார்களோ, அந்த வீடுகளில் மகிழ்ச்சியும், களிகூருதலும் உண்டாயிருந்தன. கர்த்தர் அவர்களைப் பாதுகாத்த தயவை எண்ணிப் பாடித் துதித்தார்கள்.

நாளெல்லாம் பரிசுத்தமாய் வாழ்ந்து, சாத்தானுடைய சோதனைகளை மேற்கொண்டு ஜெயங்கொண்டவர்களாய் படுக்கைக்குச் செல்லும்போது, அவர்கள் கர்த்தருடைய கிருபைகளை எண்ணிப் பாடி மகிழுவார்கள். ஆனால் மற்றவர்களோ, “எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று. …. ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே” (புல. 5:15,16) எனப் புலம்புவார்கள். தேவபிள்ளைகளே, பாவ அடிமைத்தனத்திலே சிறைபட்டுபோகாதபடி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

ஆகாப் இராஜா தன் படுக்கைக்கு மிகவும் துக்கத்தோடு செல்லுபவராக இருந்தார். அவர் தனது பக்கத்து வீட்டுக்காரனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை அபகரிக்க எண்ணியதாலேயே தன் சந்தோஷத்தை இழந்தார். இராஜா கொடுத்த பணத்தையும் மாற்று நிலத்தையும் நாபோத் வாங்க மறுத்ததால், ஆகாப் இராஜாவுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. அவன் தன் படுக்கையிலே சுவர் பக்கமாய்த் திரும்பி, படுத்துக்கொண்டான் என்று வேதம் சொல்லுகிறது. மனநிறைவு இல்லாதவர்கள் துக்கத்தோடு இப்படித்தான் திரும்பிப்படுப்பார்கள்.

சில வேளைகளில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்படுவதுண்டு. மனைவி விரும்பும் சேலையையோ, நகையையோ கணவன் உடனே வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், மனைவிமார் கோபமடைவார்கள். “உங்கள் அம்மாவுக்கு என்றால் உடனே வாங்கிக் கொடுப்பீர்கள். நான் இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரிதான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொள்வார்கள் சிறிய காரியத்தையும், பெரிதுபடுத்துபவர்களுக்கு நித்திரை வருவதில்லை!

பவுலையும், சீலாவையும் பாருங்கள். அவர்கள் எவ்வளவோ அடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய கால்கள் தொழுமரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போதும் வாய் முறுமுறுக்கவில்லை. கல்வாரி நாயகனின் அன்பும், தியாகமும், அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியையே கொண்டுவந்தது. அவர்கள் கெம்பீரமாய்ப் பாடித்துதித்தார்கள்.

வேதம் சொல்லுகிறது, “நீதிமானோ பாடி மகிழுகிறான்” (நீதி. 29:6). “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக” (சங். 5:11). தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைத் துதிக்கவும், பாடவும் அவரை சந்தோஷிப்பிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” (சங். 4:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6