ஆகஸ்டு 09 – செழிப்பு!
“கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிற வருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்” (1 சாமு. 2:7).
அன்னாள் கர்த்தருடைய பரிசுத்த அழகைக்குறித்தும், கர்த்தருடைய ஞானத்தைக்குறித்தும், கர்த்தருடைய உயிர்ப்பிக்கிற வல்லமையைக்குறித்தும் புகழ்ந்து போற்றினாள். இங்கே கர்த்தர் தருகிற செழுமையையும், ஐசுவரியத்தையும்குறித்துப் பேசுகிறாள்.
உலகத்தில் வாழ்வதற்கு பணம் தேவையே. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை” என்றார் திருவள்ளுவர். உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் பணம் தேவை. கர்த்தருடைய ஊழியத்திற்கும் பணம் தேவை.
நம் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்த மாபெரும் செல்வந்தனாய் இருக்கிறார். வெள்ளியும் அவருடையது, பொன்னும் அவருடையது. கர்த்தர் உங்களை ஐசுவரியவான்களாக்கி, உயர்த்துவதற்கு வல்லமையுள்ளவர். நீங்கள் முதலாவது கர்த்தருடைய இராஜ்யத்தையும், நீதியையும் தேடும்போது, மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூடக்கொடுப்பார்.
ஈசாக்கு தேசத்திலே விதை விதைத்தார். கர்த்தர் அவரோடு இருந்து ஆசீர்வதித்ததினால் ஈசாக்குக்கு நூறுமடங்கு பலனைக் கட்டளையிட்டார். ஈசாக்கின் தேவன் உங்களுடைய தேவன். அவர் உங்கள் வருமானத்தை பல மடங்கு ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவர். நீங்கள் இன்றைக்கு இருக்கிற நிலைமையைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தருடைய அளவற்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய்க் கொடுங்கள். வேதம் சொல்லுகிறது: “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்” (சங்.112:9).
“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” (நீதி. 19:17). வாரியிறைத்து விருத்தியடைவாரும் உண்டு. கஞ்சத்தனமாயிருந்து வறுமை அடைவாரும் உண்டு. “தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்” (நீதி. 28:27) என்று வேதம் சொல்லுகிறது.
இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து உதவிகளைப் பெற்று சிலர் அனாதை இல்லங்கள் நடத்துகிறார்கள். வேதாகமக் கல்லூரிகள் நடத்துகிறார்கள். வயோதிப இல்லங்கள் நடத்துகிறார்கள். விதவைகளுக்கு உதவிகள் செய்கிறார்கள். இவையெல்லாமே நல்ல காரியங்கள்தான். ஆனால் பெரும்பாலானோர் அதில் உண்மையாய் இருப்பதில்லை என்பதே வருத்தமான செய்தி.
“உங்களுக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு” என்று கிறிஸ்து சொல்லுகிறார். நீங்கள் ஏழைகளுக்குக் கொடுப்பதானாலும் சரி, கர்த்தருக்குக் கொடுப்பதானாலும் சரி அதில் உங்கள் தியாகம் அதிகமாய் இருக்கவேண்டும். உங்களுடைய மனதுருக்கம் அதில் இணைந்திருக்கவேண்டும். எதைச் செய்தாலும் அதை மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்யுங்கள்.
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுப்படும்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).
நினைவிற்கு:- “அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்” (ஏசா. 33:16).